சினி இடைத்தேர்தல்: 20,816 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

சினி இடைத்தேர்தல் இன்று பகாங்கில் நடைபெறுகிறது.

சுமார் 20,816 வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களில் ஒருவருக்கு இன்று வாக்களிக்க உள்ளனர். பாரிசானைச் சேர்ந்த முகமட் ஷரீம் ஜெய்ன், மற்றும் தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி எனும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் களம் இறங்குகின்றர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், தெங்கு ஜைனுலுக்கு தனது தனிப்பட்ட ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் பி.கே.ஆர் உறுப்பினரான முகமட் சுக்ரி, தான் இத்தேர்தலில் போட்டியிட பி.கே.ஆரால் ஆதரவளிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தேசிய கூட்டணியில் இருக்கும் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள், அம்னோவுக்கு வழிவிட்டு வாய்ப்பு அளிக்க தங்களின் வேட்பாளரை நிறுத்தவில்லை. அதே நேரத்தில் அம்னோ கோட்டையாக கருதப்படும் சினியில் தங்களின் வேட்பாளரை வைக்க வேண்டாம் என்று பாக்காத்தான் ஹராப்பானும் முடிவு செய்தது.

மே 6 ஆம் தேதி பதவியில் இருந்த அபுபக்கார் ஹாருன் (60), மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து இந்த இருக்கை காலியானது.

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து புதிய நடைமுறைக்கு ஏற்ப, வேட்பாளர்கள் ஆரம்பத்தில் வீடு வீடாக பிரச்சாரங்களையும் மேடை பேச்சுக் கூட்டங்களையும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், தேர்தல் ஆணையம் பின்னர் இந்த முடிவை தளர்த்தியது. ஒரு நேரத்தில் அதிகபட்சம் 250 பேர் மேடை பேச்சுக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களிடையே தொடர்பு அல்லது கைகுலுக்கல் அனுமதிக்கப்படவில்லை.

70 சதவீத வாக்காளர்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிடுகிறது. மேலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க அரசு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து சுமார் 32 தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.