கட்சி மீதான நம்பிக்கையை இழந்ததால் அம்பாங் பி.கே.ஆர் கிளையின் சுமார் 250 உறுப்பினர்கள் உடனடியாக பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர்.
கிளையின் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு கட்சியை விட்டு விலகுவதால் அம்பாங் பி.கே.ஆர் கிளை உடனடியாக கலைக்கப்படுவதாகவும் அம்பாங் பி.கே.ஆர் கிளை துணைத் தலைவர் டி. நல்லன் தெரிவித்தார்.
“சமீபத்தில் நடக்கும் சம்பவங்கள், 250 பி.கே.ஆர் உறுப்பினர்களான எங்களை கட்சியை விட்டு வெளியேறச் செய்துள்ளன.”
ஒரு கிளையிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர், அந்த கிளை கலைக்கப்படும் என்று கட்சியின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்று நல்லன் கூறினார்.
அம்பாங் கிளையின் முன்னாள் தலைவர் ஜுரைடா கமருதீன், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியுடன் பக்கபலமாக இருந்ததையடுத்து அம்பாங் பி.கே.ஆர் கிளை தள்ளாடிய நிலையில் இருந்தது.
அவ்விருவரும், ஷெரட்டன் நகர்வில் கட்சியை விட்டு வெளியேறிய பி.கே.ஆர் பிரதிநிதிகளாக இருந்தனர். இதனால் தேசிய கூட்டணி, பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மத்திய அரசை கைப்பற்றியது.
இந்த நடவடிக்கையினால் கட்சியின் அந்த இரண்டு முன்னாள் தலைவர்களும் பிப்ரவரி 24 அன்று பி.கே.ஆரால் நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் நம்பிக்கையை இழந்ததால் உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நல்லன் மேலும் கூறினார்.
பி.கே.ஆர் தலைமைத்துவம், தனிநபர்களின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்றும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியின் (பி.என்) அரசாங்கத்திற்கு அவர்கள் இப்போது ஆதரவளிப்பதாகவும் நல்லன் அறிவித்தார்.