சிலாங்கூரில் அஸ்மினின் செல்வாக்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, அரசியல் பார்வையாளர்கள் கருத்து

பி.கே.ஆர் கட்சியில் இனி இல்லை என்றாலும், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையே முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக்கூடாது.

அரசியல் பார்வையாளர் பி அன்புமணி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி, அரசியலில் விரிவான அனுபவங்களைக் கொண்டுள்ளார் என்றும், குறிப்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் என்ற அவரது அனுபவத்துடன் அடிமட்டத்தில் வலுவான ஆதரவைச் சேகரிக்க வாய்ப்பளிக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார்.

“அஸ்மினின் பங்கு மிகவும் மென்மையானது. நாம் அவரை புறக்கணிக்கவோ எளிதாக எடை போடவோ முடியாது. எதிர்காலத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு அரசியல்வாதி அவர். அவர் ஒரு முக்கியமான பாத்திரம்”.

“அஸ்மினின் அரசியல் அனுபவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் திரைக்கு முன்னால் இல்லை, அவர் எப்போதும் பின்னால் இருக்கிறார், திரைக்குப் பின்னால் இருக்கிறார்,” என்று சமீபத்தில் தொடர்பு கொண்டபோது அன்புமணி கூறினார்.

அஸ்மினுக்கு ஆதரவாகக் காணப்பட்ட பி.கே.ஆர் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நீக்கப்படுவதை மேற்கோள் காட்டி, அஸ்மீன் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க தனது சொந்த ஏற்பாடுகளை செய்கிறார் என்பதை மறுக்க முடியாது என்றார். இதனால் சிலாங்கூரில் ஓர் அரசியல் அதிர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

மேலும், கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட பிரதமர் வேட்பாளர் பிரச்சனையில் பாக்காத்தான் ஹராப்பான் (பிஹெச்) பி.கே.ஆரை ஓரங்கட்டியதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அடிமட்ட உறுப்பினர்கள், மத்திய மட்டத்தில் நிலைமையைக் கவனித்து கொண்டு வருகின்றனர்.

“அவருக்கு (அஸ்மின்) ஏற்கனவே ஒரு திட்டம் உள்ளது, ஆனால் அவர் அதை இன்னும் அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க அவர் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்.”

“அவர் ஒரு புதிய பல்லின கட்சியை அமைப்பார் என்று தோன்றுகிறது. அனைத்து மலேசியர்களுக்கும் மிகவும் நட்பாக உள்ள ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார் என்று நான் நினைக்கிறேன். பி.கே.ஆர் 2.0 போல,” என்றார்.

14வது பொதுத்தேர்தலில் பாரிசானை வீழ்த்தி பாக்காத்தான் வெற்றி பெற்ற பிறகு, அஸ்மின் 2014 முதல் 2018 வரை சிலாங்கூரின் மந்திரி பெசாராக இருந்தார். ஆனால் மகாதீரின் நிர்வாகத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் அந்த பதவியில் இருந்து விலகல் செய்தார்.

பி.கே.ஆரின் உள் பூசல் 2018 இல் நடந்த கட்சித் தேர்தலில் உச்சக்கட்டத்தை அடைந்தது. துணைத் தலைவர் பதவிக்காக அன்வாருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த ரஃபிஸி ராம்லியை எதிர்த்து அஸ்மின் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அஸ்மின் வெற்றி பெற்றார்.

அஸ்மின் பின்னர் ஷெரட்டன் நகர்வின் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இது அவரும் அவரது ஆதரவாளர்கள் குழுவும் பெர்சத்துவுடன் ஒன்றிணைந்து பாக்காத்தான் அரசாங்கத்தை அகற்ற வழிவகுத்தது.

பின்னர் அவர்கள் பாரிசான், பாஸ் கட்சிகளுடன் இணைந்து தேசிய கூட்டணியை அமைத்தனர்.

முகிதீன் யாசின் தலைமையில், அஸ்மின் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஜெனிரி அமீரின் கருத்துபடி, பி.கே.ஆரில் இருந்து அஸ்மினின் ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது கட்சிக்குள்ளே அவரது செல்வாக்கை ஒழிக்கும் முயற்சியாகவே ஒருபுறம் பார்க்கப்படுகிறது. ஆனால் மறுபுறம், இது பி.கே.ஆரின் நிலையை பாதித்தது மட்டுமல்லாமல், அடிமட்ட உறுப்பினர்களின் கோபத்தையும் தூண்டியுள்ளது, என்றார்.

“அடிமட்ட இயந்திரங்களைத் திரட்டுவதற்கும், அன்வாருக்கு ஆதரவாக இருக்கும் பி.கே.ஆரை சவால் செய்வதற்கும் சாத்தியமுள்ள அஸ்மினின் திறனை நாம் குறைமதிப்பிட முடியாது.”

“சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்தபோது அவரது சேவையையும் பங்களிப்பையும் மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நாம் அதை ஒதுக்கித் தள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், அவர் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். இப்போது தேசிய கூட்டணி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும் உள்ளார்.”

“எனவே, அவரின் சாதனைகள், அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் மத்திய மட்டத்தில் ஒரு முக்கிய தலைவராக இருப்பது போன்றவை அவருக்கு மற்றவர்களை விட மேலான நன்மைகளைத் தருகின்றன,” என்று அவர் கூறினார்.

அரசியல் பார்வையாளர் ஹிஷாமுதீன் ரைஸ் கருத்துபடி, சிலாங்கூர் மந்திரி பெசாராக பணியாற்றியதைத் தொடர்ந்து அஸ்மினின் செல்வாக்கு சிலாங்கூர் மக்களிடத்திலும், அம்மாநிலத்தின் பி.கே.ஆர் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது என்று கூறினார்.

அதோடு, அவருக்கு ஆதரவாகக் காணப்பட்ட பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பி.கே.ஆரில் அஸ்மினுக்கு இன்னும் வலுவான செல்வாக்கு இருப்பதைக் குறிக்கிறது.

“பல நூறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், பி.கே.ஆர் தலைவர்களால் கடிதம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனர், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் பல கிளைகள் கலைக்கப்பட்டுள்ளன.”

“இந்த மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் கட்சியற்றவர்களாக மாறி இருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக, அஸ்மினுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் அவர்களின் திசை குறித்து விவாதிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.