பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் உடனடி தேர்தலை நடத்த போதுமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்தார்.
சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டதால் இது சாத்தியமாகியுள்ளது என்று அஸ்மின் கூறினார்.
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்று நேற்று ஜொகூர் பாருவில் ஓர் இரவு விருந்தின் போது அஸ்மின் கூறினார்.
அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி ஒன்றுபடுவது முக்கியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க பாக்காத்தான் அரசாங்கம் 22 மாதங்களாக தவறிவிட்டது என்றும், இப்போது அவற்றை தேசிய கூட்டணி அரசாங்கம் எடுத்து செய்வதாகவும் அஸ்மின் கூறினார்.
“நாங்கள் நாட்டை அழிக்கவில்லை. அனைத்து மக்களின் நலனையும் அரசாங்கம் கவனித்துக்கொள்வதோடு, நாட்டின் செழிப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு நேரடி முதலீட்டை தொடர்ந்து ஈர்ப்போம்” என்று அவர் கூறினார்.
கோவிட்-19 பாதிப்பை அடுத்து பொருளாதார வீழ்ச்சியால் மலேசியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தின் பொருளாதார ஊக்கத் தொகுப்பைத் தொடர்ந்து நாட்டின் நிலைமை மேம்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் வேட்பாளர் குறித்த பிரச்சனைகளை தீர்க்கத் தவறியதற்காக டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாக்காத்தானையும் அஸ்மின் சாடினார்.
“தேர்தல் வரவு செலவுத் திட்டத்தை” அறிவித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஓர் உடனடி தேர்தலை நடத்த முகிதீன் தயாராகி வருவதாக சிங்கப்பூர் செய்தித்தாள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.