நாளை நாடாளுமன்றம் செல்ல நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

RM2.28 பில்லியன் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக நடைபெறும் வழக்கு விசாரணை நாளை அரை நாள் மட்டும் நடைபெற கோரி நஜிப் ரசாக் அளித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

நாளை மதியம் 2 மணியளவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட நஜீப்பின் விண்ணப்பத்தை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா நிராகரித்தார்.

முன்னதாக, நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் முகமட் ஷஃபி அப்துல்லா, நாளை நடைபெறவுள்ள வழக்கு விசாரணை அரை நாள் மட்டும் நடைபெற கோரி விண்ணப்பித்திருந்தார். இதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நஜீப், கேள்வி பதில் அமர்வுக்கு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

“அவர் செய்ய வேண்டிய பணி இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எனக்கும் நிறைவேற்ற வேண்டிய பணி உள்ளது.”

“இந்த வழக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்” என்று நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா கூறினார்.