பிபிஎஸ் வீழ்ச்சிக்கு வித்திட்ட மகாதீர், பாக்காத்தான் சரிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்

1994 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் சபா மாநிலத்தில் சபா ஐக்கிய கட்சி (பிபிஎஸ்) அரசாங்கத்தை கவிழ்ப்பதில் வகித்த பங்களிப்பு தொடர்பாக கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் ராடின் நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

ஆகவே, பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் வீழ்ச்சியால் மகாதீர் ஆச்சரியப்படக்கூடாது என்று புங் மொக்தார் கூறினார்.

“1994 ஆம் ஆண்டில் பிபிஎஸ் தலைமையிலான சபா அரசாங்கத்தை கவிழ்க்க அப்போதைய பிரதமரான மகாதீர் ‘சூத்திரம்’ செய்தவர் ஆவார். அப்போது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெரிய அளவில் பாரிசான் கட்சிக்கு தாவினர்,” என்று புங் கூறினார்.

“இதற்கு முன்பு மற்றவர்களுக்கு எதிராக அவர் செய்த காரியங்கள் இப்போது அவருக்கு நடக்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று அவர் விளக்கினார்.

பாக்காத்தானை விட்டு வெளியேறிய பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் ஒரு அங்கமாக மாறிய துரோகத்தை குறித்து மகாதீரின் புலம்பலை கேட்டு குழப்பம் அடைவதாக சபா அம்னோ தலைவருமான புங் கூறினார்.

1990 பொதுத் தேர்தல் நடைபெறுவதற்குள், அப்போதைய சபா அமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் தலைமையிலான பிபிஎஸ் கட்சி, மகாதீர் தலைமையிலான பாரிசான் கட்சியின் கூட்டணியில் இருந்து விலகியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மகாதீர் சபாவில் ஒரு அம்னோ கிளையைத் திறந்தார்.

1994 இல் சபா தேர்தலில் பைரின் குறுகிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அந்த நேரத்தில் பிபிஎஸ் பிரதிநிதிகளின் ஆதரவை பாரிசான் கைப்பற்றியது. பிபிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி அம்னோவிற்கு ஆதரவாக பாரிசானில் இணைந்த போது, பிபிஎஸ் அரசாங்கம் கவிழ்ந்தது.

பாக்காத்தான் அரசாங்கத்தை அகற்ற ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று மகாதீரின் விளக்கத்தையும் புங் மறுத்தார்.

“அவரே பதவி விலகினால் அது எப்படி ஒரு சதித்திட்டமாக இருக்கும்? அந்த நேரத்தில் பாக்காத்தான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று யாருக்கும் தெரியாது.”

“மகாதீர் தனது சொந்த விருப்பப்படி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், அதனால் அவரது அரசாங்கம் சரிந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்ட ஒரு தலைவரால் புதிய அரசாங்கத்தை உருவாக்க மாமன்னருக்கு உரிமை உண்டு என்றும் புங் கூறினார்.