டாக்டர் ஷருதீனை நீக்கியது பெர்சத்து

ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருதீன் மாட் சல்லே, மலேசியா பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த விஷயத்தை பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் இன்று ஊடக அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“பிரதமர் மற்றும் பெர்சத்து தலைவரும் செயல் தலைவருமான முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தில் தான் இனி இல்லாத நிலைப்பாடு குறித்து ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஷருதீன் மாட் சல்லே சபாநாயகருக்கு அறிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை பெர்சாட்டு உறுதிப்படுத்தியுள்ளது.”

“எனவே, பெர்சத்து அரசியலமைப்பின் 10.2.2 மற்றும் 10.2.3 பிரிவுகளின்படி அவரது (ஷருதீன்) உறுப்பியம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய கூட்டணி அரசாங்கம் (பி.என்) அமைக்கப்பட்ட பின்னர் ஷருதீன், முகிதினால் பொதுப்பணி துணைஅமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த மாத தொடக்கத்தில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.

முகிதீனுக்கும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் இடையிலான தலைமைத்துவ பிரச்சனையை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இதற்கிடையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர்கள் பெர்சத்து கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அதில் உறுப்பினர்கள் பங்கெடுக்க வேண்டாம் என்று ஹம்சா பெர்சத்து உறுப்பினர்களை எச்சரித்தார்.

“கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் பெர்சத்து தலைவர்களை ஆதரிக்கும் உறுப்பினர்களை பெர்சத்து எச்சரிக்கின்றது.”

“கட்சியின் அரசியலமைப்பை மீறும் எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பெர்சத்து தயங்காது” என்று உள்துறை அமைச்சருமான ஹம்சா ஜைனுடின் கூறினார்.