காவல்துறையின் தோல்வி மற்றும் அலட்சியத்தின் விளைவாக தீயணைப்பு வீரர் ஆதிப் இறந்துள்ளார் எனும் அடிப்படையில் இழப்பீடு கோருவதற்கு சிவில் நடவடிக்கை எடுக்க மறைந்த முகமட் ஆதிப் முகமட் காசிமின் குடும்பத்தினரே முடிவு செய்ய வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
முகமட் ஆதிபின் குடும்பத்தினர் அவரது மரணம் தொடர்பாக நீதி கிடைக்க தகுதியானவர்கள் என்று அதன் துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கூறினார்.
சுபாங் ஜெயா யு.எஸ்.ஜே 25, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தளத்தில் நடந்த கலவரத்தின் போது பலத்த காயம் அடைந்த 24 வயது தீயணைப்பு வீரர் 17 டிசம்பர் 2018 அன்று இறந்தார். காவல்துறையின் தோல்வி மற்றும் அலட்சியத்தின் விளைவாக ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு கோருவதற்கு முகமட் ஆதிபின் குடும்பத்தினர் சிவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
27 செப்டம்பர் 2019 அன்று, ஷா ஆலம் கொரோனர் நீதிமன்றம் முகமட் ஆதிபின் மரணம் இரண்டு அல்லது மூன்று அறியப்படாத நபர்களால் செய்யப்பட்ட குற்றச் செயலின் விளைவாகும் என்று தீர்ப்பளித்தது.
முகமட் ஆதிபின் குடும்பத்தின் சிவில் நடவடிக்கைகளுக்கு கே.பி.கே.டி ஆதரவளிக்கிறதா என்று கேட்டதற்கு, இஸ்மாயில் இந்த விவகாரத்தை சட்டத்திற்கு ஒப்படைத்துவிட்டதாக கூறினார்.