பாக்காத்தான் ஆட்சியின் போது அதன் அமைச்சரவை முடிவெடுத்த போதிலும், அப்போது பாக்காத்தான் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சராக இருந்த முகிதீன் யாசின் தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கும் நோக்கத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
பாக்காத்தான், அரசாங்கமாக இருந்தபோது வழக்கு குறித்து முகிதீனுடன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் இறுதியில் அது எந்த பலனையும் தரவில்லை என்றும் லிம் மேலும் கூறினார்.
ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு, பெர்சத்துவை பாக்காத்தானிலிருந்து வெளியே கொண்டு வந்து இறுதியில் தேசிய கூட்டணியின் ஆட்சியின் கீழ் பிரதமராகியுள்ள முகிதீன் அப்படி நடந்து கொண்டதன் காரணம் ஏன் என்பது இப்போது தனக்குத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
“இது (பாக்காத்தான்) அமைச்சரவையின் முடிவு என்றாலும், அதை நடைமுறைப்படுத்துவது உள்துறை அமைச்சின் பொறுப்பாகும். அந்த நேரத்தில், அவர் (முகிதீன்) எங்களுடன் மிகவும் நட்பாக இருந்தார், காலை உணவுக்காக என்னை அவரது வீட்டிற்கு பல முறை அழைத்துள்ளார்.”
“காலை உணவின் போது, நான் அவரிடம் தியோ பெங் ஹோக்கின் வழக்கைப் பற்றி கூறியுள்ளேன். இப்போது தான் அந்த வழக்கு ஏன் மேலதிக வளர்ச்சியை அடையவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரிய சதி உள்ளது” என்று லிம் செமினியில் நடந்த தியோவின் 11வது ஆண்டு நினைவு தினத்தில் நினைவுகூர்ந்தார்.
தனது நண்பர்களைக் ஏமாற்றி, அவர்களுக்கு துரோகம் இழைத்ததன் மூலமே முகிதீன் தனது தற்போதைய நிலையை அடைந்துள்ளார் என்றும் லிம் கூறினார்.
டிஏபி இனி ஆட்சியில் இல்லை என்றாலும், தியோவுக்கான நீதி போராட்டத்தை கட்சி ஒருபோதும் கைவிடாது என்று லிம் உறுதியளித்தார்.