அடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி!

தாமான் யு தானின் பிரதான கட்டமைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் சுவரை புதைகுழி ஒன்று விழுங்கிவிட்ட நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

டிபிகேஎல் மீட்புப் படை இன்று மதியம் 3.35 மணிக்கு ஜாலான் தாமான் யு தானில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு விரைந்தது.

அந்த இடத்தில் காணப்பட்ட மரங்கள் மற்றும் தொலைத் தொடர்பு கம்பங்கள் இடிந்து விழப்போகும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டன.

புதைகுழி பகுதியில் நீர் ஓட்டமும் உள்ளது என்று டி.பி.கே.எல் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அங்குள்ள சாலை மூடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆயேர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டாம் என்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழி அப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 15 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என கூகிள் எர்த் (Google Earth) அளவீட்டு கருவிகளின்படி அறியப்பட்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் வார இறுதியில் பெய்த கனமழையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனிடையே, இன்று, டெங்க்கில் நகரத்திற்கு அருகில் சுமார் 500 குடியிருப்பாளர்கள் வெள்ளம் காரணமாக மூன்று தற்காலிக மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.