நாடாளுமன்ற விவாதம்: உரிமைகள் பொறுப்புகளுடன் வருகின்றன

இன்று நாடாளுமன்ற விவாதம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டது. தாஜுதீன் அப்துல் ரஹ்மான் (பி.என்-பாசிர் சாலாக்) “மலாய் நாடு” மற்றும் பூமிபுத்ரா உரிமைகளைப் பற்றி வலியுறுத்தினார். மாஸ்லீ மாலிக் (பேபாஸ் – சிம்பாங் ரெங்கம்) அந்த உரிமைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்ற பொறுப்போடு வருகின்றன என்று கூறினார்.

தாஜுதீன், மலாய் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், அவர்கள் “மலாய் நாட்டில்” வாழ்கிறார்கள் என்பதையும், பூர்வீக பூமிபுத்ரா மக்களுக்கு சலுகைகள் இருப்பதையும் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் சார்பாக விவாதித்த போது சுட்டிக்காட்டினார்.

“அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, மலேசியர்கள் அல்லது வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்கள், இது மலாய் நாடு என்பதையும் நாட்டின் அசல் குடிமக்கள் மலாய் மக்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

“மலாய்க்காரர்கள் நம் நாட்டின் பழங்குடி மக்கள். அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகள் உள்ளன. அவற்றை அரசாங்கமும் நாம் அனைவரும் பராமரிக்க வேண்டும்.”

“மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரை, அவர்களும் நம் நாட்டு மக்கள். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாதவர்களின் உரிமைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது” என்று அவர் விவாதத்தின் போது கூறினார்.

பின்னர் மஸ்லீ தலையிட்டு தாஜுதீனின் வாதத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த உரிமைகள் பெரும் பொறுப்போடு வருகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“பாசீர் சாலாக் (தாஜுதீன்) அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கான பெரிய பொறுப்பும் அந்த உரிமையுடன் வருகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா. ஒடுக்குமுறையின்மை, ஊழல் இன்மை, கிளெப்டோக்ராசி இன்மை, தவறான நடத்தை எதுவும் இல்லாமை, என்று இவை அனைத்தும் உரிமைகள் உள்ளதால் மட்டுமல்லாமல் மற்ற இன மக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தாஜுதீன் பின்னர் “தங்கள் சொந்த உரிமைகளை எடுத்துக் கொள்ளும் மக்களை” ஒடுக்குமுறையாளர்களாக கருதக்கூடாது என்று பதிலளித்தார்.

“தங்கள் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் மக்கள், ஏன் ஒடுக்குமுறையாளர்களாக கருதப்படுகிறார்கள்? மற்றவர்களின் உரிமைகளை அவர்கள் பரிக்கவில்லையே.”

“மலாய்க்காரர்கள் தங்கள் சொந்த உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாக்கும்போது, மற்றவருக்கு அநியாயமாக கருதப்படுகிறது என்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம். அது சரியல்ல. மற்றவர்களின் உரிமைகளையும் நாங்கள் பாதுகாக்கிறோம் என்று நான் முன்பே குறிப்பிட்டேன். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார்.

எவ்வாறாயினும், அது தனது நோக்கம் அல்ல என்று மஸ்லீ தெளிவுபடுத்தினார். மேலும் “அடக்குமுறைப்படுத்தாமல், திருடாமல் மற்றும் கொள்ளையடிக்காமல்” ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டியதன் அவசியத்தை தாஜுதீன் ஒப்புக் கொண்டாரா என்ற தனது கேள்வியை மீண்டும் வலியுறுத்தினார் மஸ்லீ.

அதற்கு பதிலளித்த தாஜுதீன், இதுபோன்ற விஷயங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன என்றார்.

“இதுபோன்ற வழக்குகள் எங்கும் நிகழ்கின்றன. மலாய்க்காரர்களிடையே, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு இடையே, வெள்ளைக்காரர்களிடையே, ஆப்பிரிக்காவிலும் கூட ஏற்கனவே நடந்துள்ளன.”

2018 பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்ட பின்னர், மலாய் உயிர்த்தெழுதல் பேரணிகளை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட மலாய்க்காரர்கள் பிரச்சினைகளை தொடர்ந்து முன்னிலைப்படுத்தும் மக்களின் பிரதிநிதியாக தாஜுதீன் விளங்குகிறார்.

இருப்பினும், 1எம்.டி.பி ஊழலையும் அவர் விமர்சித்துள்ளார். இது தேர்தலில் அம்னோ மற்றும் பாரிசானின் தோல்விக்கு முக்கிய காரணமான கருதப்படுகிறது.