‘புதிய கோவிட்-19 திரளைகள் பற்றி கவலைப்படுகிறேன்’- முகிதீன்

அண்மையில், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் (பி.கே.பி.பி) 13 கோவிட்-19 திரளைகள் கண்டறியப்பட்டு இருப்பது குறித்து பிரதமர் முகிதீன் யாசின் கவலை தெரிவித்துள்ளார்.

இதில், கோலாலம்பூர் ப்ரிக்ஃபீல்ட்ஸ் உணவக திரளை, சரவாக் நகரில் உள்ள ஸ்டூடோங் திரளை மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களிடமிருந்து கண்டறியப்பட்டுள்ள திரளைகளும் அடங்கும்.

“குறைவாக இருந்தபோதிலும், பி.கே.பி.பி காலத்தில் 13 புதிய திரளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.”

“கடந்த சில நாட்களாக நேர்மறையான பாதிப்புகள் மீண்டும் இரட்டை இலக்கங்களுக்கு திரும்பியுள்ளது என்பது எனக்கு இன்னும் கவலை அளிக்கிறது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள பி.கே.பி.பி யின் சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

இது தொடர்பாக, கோவிட்-19 தொற்றுநோய் முடிவடையாததால், மக்கள் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம் என்று முகிதீன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மக்கள் பொறுப்புடன் இருந்தால், பி.கே.பி.பி வெற்றிகரமாக நிறைவேற்றப்படலாம் என்று அவர் கூறினார்.

பி.கே.பி அமல்படுத்தலின் போது அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைகளினாலும் மக்களின் உயர் ஒழுக்கத்தினாலும் சாதகமான விளைவுகளை நாடு கண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. பொருளாதாரம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் மக்கள் புதிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க முடிகிறது என்றார் முகிதீன்.

“இருப்பினும், நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் முடியவில்லை என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.”

“எனவே கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதில் நாம் அனைவரும் உறுதியுடன் இருப்போம். நாம் அனைவரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும், அமைதியாக இருக்கவும் வேண்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.