நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இனவாதம், தூண்டிவிடுதல், நாகரிகமற்ற நடத்தை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் அவதூறு வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அஜீசான் அசார் ஹருன் அதன் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அவர் இதனைக் கூறினார்.
“எனவே, இந்த சபையில் அவ்வகையான சொற்கள் இன்னும் பயன்படுத்தப்பட்டால், நானும் துணை சபாநாயகரும் நாடாளுமன்றத்தின் விதிகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்போம்.”
“இந்த நாடாளுமன்றத்தில் நாங்கள் இருவரும் பெரும்பணியையும் பொறுப்பையும் கொண்டுள்ளோம் என்பதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறேன். இது மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறிக்கிறது” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி விப் தலைவர்களுக்கும் இந்த விவகாரம் குறித்து நேற்று தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் அஸ்மின் அலி (பெர்சத்து-கோம்பாக்); ஹம்சா ஜைனுதீன் (பெர்சத்து-லாருட்); தக்கியுதீன் ஹாசன் (பாஸ்-கோத்தா பாரு); ஃபாடில்லா யூசோஃப் (ஜி.பி.எஸ்-பெட்ராஜாயா); ஜோஹரி அப்துல் (பி.கே.ஆர்-சுங்கை பட்டானி); ஆலிஸ் லாவ் (டிஏபி-லானாங்); ஹசனுதீன் முகமட் யூனுஸ் (அமானா-ஹுலு லங்காட்); மஸ்லீ மாலிக் (பேபாஸ்-சிம்பாங் ரெங்கம்) மற்றும் ஷாஹிதன் காசிம் (பி.என்.பி.பி.சி) ஆகியோர் இதில் அடங்குவர்.
“சபையின் விதிகளை பாதுகாத்து, இனவாதம், தூண்டிவிடுதல், நாகரிகமற்ற நடத்தை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் அவதூறு வார்த்தைகளை இனி பிரதிநிதிகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதில் தங்கள் உறுதிப்பாட்டை அனைத்து கட்சி விப் தலைவர்களும் ஒருமனதாக புதுப்பித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் (அம்னோ-பாலிங்) நாடாளுமன்றத்தில் கஸ்தூரிரானி பட்டு அவர்களுக்கு (டிஏபி-பத்து காவான்) எதிராக இனவெறி மற்றும் பாலியல் ரீதியான அவதூறு வார்த்தைகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பல்வேறு விமர்சனங்களைப் பெற்ற அப்துல் அஜீஸ் பின்னர் மன்னிப்பு கேட்டார்.