முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் இன்னும் பெர்சத்து உறுப்பினராக உள்ளார் என்றும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து தமக்கு ஆதரவு இருப்பதாகவும் நம்புகிறார்.
95 வயதான அவர், தற்போது முகிதீன் யாசினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பெர்சத்து கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் பெர்சத்துவில் தமக்கு இன்னும் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.
“பொதுவாக, பெர்சத்து என்னை அவைத் தலைவராக ஆதரிக்கிறது, அவர்கள் என்னை நம்புகிறார்கள்.”
“நாங்கள் இன்னும் பெர்சத்து உறுப்பினர்களாக இருப்பதாகவே கருதுகிறோம். முகிதீன் யாசினை ஆதரிக்காவிட்டால் உடனே கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.”
“அவ்வாறு செய்ய முடியாது. கட்சியின் அரசியலமைப்பில் அதன் நடைமுறைகள் இருக்கின்றன. எனவே, நான் இன்னும் பெர்சத்து உறுப்பினராக இருக்கிறேன். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை நாங்கள் காத்திருப்போம்” என்று முன்னாள் பிரதமர் ‘தி மலேசிய இன்சைட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கட்சிக்கு அரசியலமைப்பு உள்ளது என்றும் வெளிப்படையான விசாரணை இல்லாமல் யாரையும் நீக்க முடியாது என்றும் மகாதீர் கூறினார்.
“கட்சி அரசியலமைப்பில், தலைவர் என்பவர் அவைத் தலைவருடன், அதாவது என்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் முகிதீன் என்னிடம் கேட்காமலேயே என்னை நீக்கிவிட்டார். அவர் என்னிடம் கேட்காமல் செயலாளரையும் நீக்கம் செய்துவிட்டார்” என்றார் டாக்டர் மகாதீர்.
“நீங்கள் அவரை ஆதரிக்கவில்லை என்றால், அவர் உங்களை நீக்குவார், அவரை ஆதரிக்கும் நபர்களை உடன் வைத்துக்கொள்வார், பதவி கொடுப்பார்.”
“ஆனால் பல அடிமட்ட உறுப்பினர்கள் இன்னும் பழைய பெர்சத்துவையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்ல. பெர்சத்துவின் அசல் குறிக்கோள், அதாவது அம்னோவை எதிர்ப்பது, என்ற நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”
“இப்போது ஒரு தலைவர் இல்லாமல் தொடர வேண்டும்” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட “பெர்சாட்டு பிளாக்அவுட்” (“Bersatu Blackout”) பிரச்சாரம், தமக்கு அடிமட்ட ஆதரவு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
“அவர்களுக்கு ஒரு தலைவர் இல்லை என்றாலும், அவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தார்கள். சனிக்கிழமை, மண்டபத்தில் என்னோடு 800 பேர் இருந்தார்கள்.”
“அந்த மண்டபத்தில் 2,000 பேர் வரை கூடலாம். ஆனால் கூடல் இடைவெளி காரணமாக, நாங்கள் 800 பேரை மட்டுமே நுழைய அனுமதித்தோம். வெளியில் இன்னும் பலர் இருந்தனர். இணையத்தில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த சுமார் 17,000 பேர் எங்களோடு உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.