வெள்ளிக்கிழமை முதல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல்

வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் அல்லது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் இந்த வெள்ளிக்கிழமை முதல் அரசாங்கம் நிர்ணயித்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) மற்றும் வீட்டில் கட்டாய தனிமைப்படுதல் விதிகளை மீறும் நபர்கள் இன்னும் இருப்பதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையமான பொது பயிற்சி நிறுவனத்திலோ அல்லது தங்கும் விடுதியிலோ (ஹோட்டல்) அவர்கள் தனிமைப்படுத்தப்படும் செலவை முன்னர் ஒப்புக்கொண்ட செலவின் அடிப்படையில் முழுமையாக ஏற்க வேண்டும் என்றார்.

“தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) சுகாதார அமைச்சகத்துடன் (எம்ஓஎச்) இணைந்து, பொருத்தமான பொது பயிற்சி நிறுவனம் அல்லது தங்கும் விடுதியை தனிமைப்படுத்தப்பட்ட நிலையமாக அடையாளம் காணும்” என்று அவர் இன்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு உத்தரவுகளை மீறியதாக நம்பப்படும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவிய பின்னர், சுகாதார அதிகாரிகள் அவரை தேடுவதாக கூறப்பட்டது.

இளஞ்சிவப்பு கைப்பட்டை (wristband) அணிந்திருந்த அந்தப் பெண், ஈப்போ, மேரு ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதைக் காண முடிந்தது.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட எஸ்ஓபி-க்கு இணங்காதவர்களை அரசாங்கம் தீவிரமாக கவனிப்பதாகவும், இதனால் கோவிட்-19 நோய்த்தொற்று குடும்ப உறுப்பினர்களுக்கும் சுற்றியுள்ள சமூகத்திற்கும் பரவ வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பொறுப்பற்றவை. RM1,000 அபராதம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது உட்பட கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள். மேலும் ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.