‘நிலைமை கவலையளிக்கிறது’ – டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

கோவிட்-19 தினசரி பாதிப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு ஆபத்தானது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று மேலும் 15 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

“கோவிட்-19 இன் சமீபத்திய நிலைமை ஆபத்தானதாக உள்ளது. ஏனெனில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறிப்பாக உள் நாட்டில் ஏற்படும் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.”

“முன்னதாக, ஜூலை 9 அன்று செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 63 ஆகக் குறைந்தது. ஆனால் அது அதிகரிக்கத் தொடங்கி செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை ஜூலை 19 அன்று 100க்கும் மேற்பட்ட பாதிப்புகளுக்குத் திரும்பியுள்ளது. இப்போது 130 பாதிப்புகளை எட்டியுள்ளது” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இன்று 15 புதிய பாதிப்புகளில், நான்கு மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள், மேலும் 11 உள்ளூர் தொற்றுநோய்கள், அதில் 10 மலேசியர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

ஏறக்குறைய பாதி, அதாவது உள்ளூர் தொற்று பாதிப்புகளில் ஐந்து, சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு புதிய திரளையை (கிளஸ்டர்) உள்ளடக்கியது. இது ‘சென்டோசா திரளை’ என்று குறிப்பிடப்படுகிறது. சரவாகில் மேலும் மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மற்றும் சபாவில் இரண்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையில், இன்று மேலும் ஏழு நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,562 ஆக உள்ளது. இது மொத்த கோவிட்-19 பாதிப்புகளில் 97.1 சதவீதமாகும்.

சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 130 நோயாளிகளில், நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். ஒருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இன்று இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மொத்த இறப்பு எண்ணிக்கை 123 ஆக உள்ளது, இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையில் 1.4 சதவீதமாகும்.