மகாதீர்: டிஏபி அச்சுறுத்துகிறது என்பது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் | பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது, டிஏபி கட்சி மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டுகள் நஜீப் ரசாக்கை மீண்டும் அரசாங்கத்திற்குள் அனுமதிக்க எதிர்க்கட்சிகளால் ஜோடிக்கப்பட்டவை என்று டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் கூறியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதக் கூட்டத்தில் பேசிய மகாதீர், நஜிப் மீண்டும் அரசாங்கமாகும்போது, அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் கைவிடப்படும் என்று நஜீப் நம்புவதாகக் அவர் கூறினார்.

அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில், பாக்காத்தான் கட்சியுடன் டிஏபி தொடர்ந்து அரசாங்கமாக இருந்தால், டிஏபி மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டை நஜிப் முன்வைத்தார் என்று மகாதீர் தெரிவித்தார்.

“இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. மலாய்க்காரர்களை பயமுறுத்தி அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தை நிராகரிக்க செய்வதே இதன் நோக்கம்.”

“உண்மையில், டிஏபி மலாய்க்காரர்களை அழிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுத் தேர்தலில் அரசாங்கமாக இருக்க ஆணையை பெற்ற பாக்காத்தான் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது டிஏபி. டிஏபி-யை தவிர, பி.கே.ஆர், அமானா மற்றும் பெர்சத்து ஆகியவையும் பாக்காத்தானில் உள்ளன.

பாக்காத்தான் அரசாங்கத்தின் போது, டிஏபி கட்சி அரசாங்கத்தை ஆதிக்கம் செலுத்துகிறது என்றும், மகாதீர் அதில் ‘பொம்மையாக’ இருப்பதாகவும், இதனால் மலாய்க்காரர்களும் இஸ்லாமும் அச்சுறுத்தப்படுகிறது என்றுமே எதிர்க்கட்சியின் பெரும்பலான வாதங்கள் இருந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை மகாதீர் பல முறை மறுத்துள்ளார்.

பாக்காத்தான் காலத்தில், பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் முகிதீன் இருந்தார் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

உள்துறை அமைச்சராக இருந்த போது, டிஏபி-யின் அச்சுறுத்தலை (அப்படி ஏதேனும் இருந்திருந்தால்) முகிதீன் அறிந்திருப்பார். டிஏபி கட்சியின் பதிவை ரத்து செய்வதன் மூலம் அதை அவர் எளிதில் சமாளித்திருக்க முடியும் என்று மகாதீர் கூறினார்.

“டிஏபி பதிவை ரத்து செய்வதன் மூலம், டிஏபி செயலிழந்து அழிந்துவிடும் என்பதை உள்துறை அமைச்சர் அறிந்து உணர்ந்திருப்பார்.”

மலாயன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (பிகேஎம்) எதிராக அரசாங்கம் அவ்வாறு செயல்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் அக்குழு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“டிஏபி கட்சி, மலாயன் கம்யூனிஸ்ட் கட்சி (பிகேஎம்) போல வலுவாகவும் இல்லை. டிஏபி வெற்றிபெற முடியாது […] ஆயுதம் ஏந்திய இயக்கத்துடன் பிகேஎம் கட்சியே தோல்வியடைந்தது,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட “பொய்கள்” முகிதீனையும் கட்சியின் சில தலைவர்களையும் கவர்ந்தது. அதனால் பாக்காத்தானை விட்டு அவர்கள் வெளியேறத் தூண்டியது என்று மகாதீர் கூறினார்.

“அதனுடன், நானும் பாக்காத்தான் அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினேன் … எனது விலகல் தவிர்க்க முடியாதது” என்று அவர் கூறினார்.

தனது உரையில், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை (ஜி.எல்.சி) வழிநடத்த தொழில்முறை நபர்களை நீக்கிவிட்டு அரசியல்வாதிகளை நியமிப்பதில் தேசிய கூட்டணி எடுத்துள்ள நடவடிக்கையையும் மகாதீர் விமர்சித்தார்.