டிக்டோக், யூடியூப் வீடியோக்களுக்கு ஃபினாஸ் உரிமம் தேவையில்லை

சமூக ஊடக பயனர்கள் இனி மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ்)/Perbadanan Kemajuan Filem Nasional Malaysia (Finas) உரிமம் தேவையில்லாமல் வழக்கம் போல் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.

“சமூக ஊடக பயனர்கள் தற்போதுள்ள டிக்டோக் (TikTok), யூடியூப் (YouTube) போன்ற தளங்களை சுதந்திரமாகப் பயன்படுத்த உரிமையுள்ளது. உரிமத்திற்கு விண்ணப்பிக்காமல் அல்லது ஃபினாஸ் தங்கள் மீது வழக்குத் தொடுக்கும் என்று அச்சம் ஏதுமின்றி வழக்கம்போல வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றலாம்” என்று அவர் கூறினார்.

இன்று அமைச்சரவை ஒப்புக் கொண்ட விஷயங்களில் இந்த விவகாரமும் ஒன்று என்றார் சைபுதீன் அப்துல்லா.

இன்ஸ்டாகிராம் (Instagram) டிக்டோக் (TikTok) போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு உரிமத் தேவை பொருந்துமா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
இன்ஸ்டாகிராம், டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் அல்லது சேனல்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமானால் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து சைஃபுதீன் நேற்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

கோவிட்-19 இன் போது அந்நிய தொழிலாளர்களை அரசு நடத்தும் விதம் தொடர்பான ஆவணப்படங்களை வெளியிட்ட அல்-ஜசீராவுக்கு உரிமம் உள்ளதா என்று விசாரிக்க அரசாங்கம் முடிவு செய்ததை அடுத்து இந்த உரிமப் பிரச்சினை எழுந்தது.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஊடக சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அமைச்சரவை உறுதியாக இருப்பதாகவும், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகச் சட்டத்தில் (1981) திருத்தம் செய்யும் முயற்சிகளில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போதைய கால நிலைமையை கருத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல இந்தத் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.