இதற்குமுன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே விவாதத்தின் மாற்றத்தையும் தரத்தையும் காண முடிந்தது. ஆனால், இப்போது அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாகத் தெரிகிறது, அதன் முன்னாள் சபாநாயகர் கூறியுள்ளார்.
முகமட் அரிஃப் யூசோப்பின் கருத்துபடி, ஒரு காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்ல நடத்தையுடன் வாதிட்டனர். வாதிடும் போது எண்களையும் உண்மை கருத்துகளையும் சேர்த்து கொள்வார்கள் என்றார்.
ஆனால் இரண்டு வார அமர்வுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் நடப்பது குறித்து அவர் கவலைப்படத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் இருந்த காலத்திற்கு மீண்டும் திரும்பிவிட்ட அறிகுறிகள் உள்ளன என்றார் முகமது ஆரிஃப்.
“கடந்த இரண்டு வாரங்கள் நடப்பதை பார்க்கும்போது, அது பழைய பழக்கவழக்கங்களுக்குத் திரும்பியதாகத் தெரிகிறது” என்று அவர் இன்று கூறினார்.
ஜூலை 13 ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில் இருந்து பல சர்ச்சைகள் நடந்துள்ளன. எவ்வாறாயினும், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் – கஸ்தூரி பட்டு விவகாரம், இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான், பத்து காவான் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின் தோலின் நிறம் குறித்து இழிவாக கிண்டல் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் கஸ்தூரி பட்டுவை பார்ப்பதை எளிதாக்க அவர் முகப்பூச்சு பயன்படுத்த வேண்டும் என்று அப்துல் அஜீஸ் பரிந்துரைத்தார்.
ஒரு நாள் கழித்து புதிய சபாநாயகர் அசார் ஹருன் அறிவுறுத்திய பின்னரே அப்துல் அஜீஸ் மன்னிப்பு கேட்டார்.
முகமது ஆரிஃப் ஒரு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் சட்டத் துறையில் சேர்வதற்கு முன்பு ஒரு கல்வியாளராக இருந்துள்ளார். பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் கடைசியாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்துள்ளார்.
பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் அவர் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு பதிலாக பிரதமர் முகிதீன் யாசின் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்து முகமட் ஆரிப்பை நீக்கினார்.
இந்த தீர்மானத்தை பின்னர் முகமது ஆரிஃப் ஏற்றுக்கொண்டார். நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அசார் ஹருன் அரசாங்கத் தொகுதியிலிருந்து இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.
மாற்றங்கள் நிகழ்ந்து விவாதத்தின் தரம் மேம்பட்டு வரும்போது, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வம்பு செய்து அமர்வை சீர்குலைக்க முனைகின்றனர் என்றார் 71 வயதான முகமட் ஆரிஃப்.
“அவர்கள் சபையை விட்டு வெளியேறவோ அல்லது அமரும்படியோ அறிவுறுத்தப்படும்போது அதற்கு இணங்க மறுக்கிறார்கள். அப்படி உள்ளவர்கள் அதிகம் இல்லை, ஆனால் அவர்கள் சபையில் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர்” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் செய்ய விரும்பிய சீர்திருத்த முயற்சிகளை அரசாங்கம் எவ்வாறு வலுவாக ஆதரித்தது என்பதையும் அவர் விவரித்தார். அந்த நேரத்தில் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது அவர்களும் அதை வழிநடத்திக் காட்டினார் என்றார்.
“பாக்காத்தான் அமைச்சர்களிடமிருந்து நான் நல்ல ஒத்துழைப்பைப் பெற்றேன். நாங்கள் கொண்டு வர விரும்பும் சில புதுமைகள் இருந்தன. முதலில் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர், ஆனால் இறுதியில் நாங்கள் அவர்களுக்கு நம்பிக்கைய அளிக்க முடிந்தது.”
“இந்த சீர்திருத்தம் நல்லது என்று அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமதுவை நாங்கள் சமாதானப்படுத்தி அவருக்கு நம்பிக்கை கொடுக்க முடிந்தது.”
“அதனால்தான் அமைச்சரின் கேள்வி நேர அமர்வின் போது, டாக்டர் மகாதீர், கேள்விகளுக்கு தானே பதிலளிப்பார்” என்று அவர் கூறினார்.