சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நியமிப்பதில் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்ட அதிகாரியுமான துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் தெரிவித்தார்.
சபாநாயகர் அசார் அஜீசன் ஹருன், துணை சபாநாயகர் அசாலினா மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளராக நிஜாம் மைடின் பச்சா மைடின் ஆகியோரின் நியமிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சவால் செய்ய டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் அவரது குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தொடர்ந்து அசாலினா இவ்வாறு கூறியுள்ளார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 63(1)ஐ மேற்கோள் காட்டிய அசாலினா, எந்தவொரு நாடாளுமன்ற சபையிலும் அல்லது அதன் எந்தவொரு குழுவிலும் எந்தவொரு நடவடிக்கைகளின் செல்லுபடியையும் எந்தவொரு நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது என்றார். (“Kesahan apa-apa prosiding di dalam mana-mana satu Majlis Parlimen atau dalam mana-mana jawatankuasanya tidak boleh dipersoalkan di dalam mana-mana mahkamah.”)
முன்னாள் பேராக் சட்டமன்ற சபாநாயகர் வி.சிவகுமார் மற்றும் ஆர்.கணேசன் ஆகியோரின் வழக்குகள் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அசாலினா மேற்கோளிட்டுள்ளார். அந்த வழக்கில், சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கவும் பதவி நீக்கம் செய்யவும் சபைக்கே அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு, சட்டப்பூர்வமாக யார் நியமிக்கப்பட்டார் என்பது குறித்த விடயங்கள் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், நாடாளுமன்றத்தின் கூட்டத்தின் 6வது விதிகளின் கீழ் அசாலினாவை நியமனம் செய்வதற்கான தீர்மானம் வாசிக்கப்படுவதற்கு முன்பாகவே முன்னாள் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் தனது பதவியில் இருந்து விலகிவிட்டார், என்றார் அசாலினா.
“எனவே, கூட்டத்தின் விதிகள் அல்லது அரசியலமைப்பின் கீழ் எந்த ஒரு மீறலையும் நான் இங்கே காணவில்லை.”
“இருப்பினும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், சட்ட துறையில் இருக்கும் நானும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்ப்பதற்காக விட்டுவிடுகிறேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 13 ஆம் தேதி முகமட் ஆரிஃப் யூசோஃப் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகராக நீக்கப்பட்டார்.
பிரதமர் முகிதீன் யாசின், முகமட் ஆரிஃபுக்கு பதிலாக புதிய சபாநாயகரை நியமிக்க அத்தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
ஙாவை துணை சபாநாயகராக நீக்க தனி தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் முகமட் ஆரிஃப் நீக்கப்பட்டவுடன் ஙாவும் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நியமனத்திற்கு எதிராக சவால் விடுத்த மற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மகாதீர் (ஜெர்லுன்), மஸ்லீ மாலிக் (சிம்பாங் ரெங்கம்), அமிருதீன் ஹம்சா (குபாங் பாசு) மற்றும் ஷாருதீன் முகமட் சல்லே (ஸ்ரீ காடிங்) ஆவர்.