ஸ்லிம் இடைத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பெர்சத்து குழுவுடன் இணைந்து பணியாற்ற பாக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தேசிய கூட்டணி (பிஎன்) வேட்பாளரை எதிர்த்து ஸ்லிம் இடைத்தேர்தலில் ‘பெர்சத்து பிளாக்அவுட்’ போட்டியிடுவதாக செனட்டர் மர்சுகி யஹ்யா அறிவித்ததை அடுத்து அன்வார் இதனைக் கூறினார்.
ஸ்லிம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடாது என்று பாக்காத்தான் ஹராப்பான் தலைவர் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் கூறியதாக மர்சுகி முன்பு கூறியிருந்தார்.
“அவர் அப்படி கூறியிருப்பது குழப்பம் அளிக்கிறது. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்களின் நிலைப்பாடு என்ன என்று அறிய வேண்டும். அதுவே எங்களின் நிலைப்பாடு. பின்னர் செவ்வாய்க்கிழமை அன்று இது குறித்து முடிவு செய்ய பாக்காத்தான் சந்திக்கும்” என்று அன்வார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதீரின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக்காத்தான் ஒரு பிரதிநிதியை அனுப்பியதாகவும் அன்வார் கூறினார்.
“கடந்த இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட்டதால் மகாதீரின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக்காத்தான் முதலில் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பாக்காத்தான் முடிவு செய்ததாகவும், ஆனால் இப்போது நிலைமை வேறுபட்டுள்ளது என்றும் அன்வார் கூறினார்.
“சினியில் கடந்த இடைத்தேர்தலில், எங்கள் கவலை நிச்சயமாக கோவிட்-19 பற்றியதாக இருந்தது. பிரச்சாரத்தின் வாய்ப்பும் மிகவும் குறைவாக இருந்தது. ஆகவே, அப்போது நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தோம்.”
“ஆனால் இப்போது நாங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். செவ்வாயன்று நாங்கள் எங்கள் முடிவை வெளியிடுவோம்” என்று அவர் கூறினார்.
ஜூலை 15 ஆம் தேதி பதவியில் இருந்த குசைரி அப்துல் தாலிப் திடீரென இறந்ததைத் தொடர்ந்து ஸ்லிம் சட்டமன்ற தொகுதி இருக்கை காலியானது. 2004 முதல் நான்கு தவணைகள் அந்த இருக்கையை தக்கவைத்து வந்த சட்டமன்ற உறுப்பினர் அவர் ஆவார்.
15வது பொதுத்தேர்தலில் குசைரி, பாக்காத்தான் வேட்பாளர் முகமட் அம்ரான் இப்ராஹிம் மற்றும் பாஸ் கட்சியை சேர்ந்த முகமட் சுல்பாட்லி ஜைனலை தோற்கடித்தார்.
பெர்சத்து சின்னத்தின் கீழ் போட்டியிட்ட குசைரி, 2,183 வாக்குகள் பெரும்பான்மை பெற்று 8,327 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
அத்தொகுதியில், 23,300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
பெர்சத்து இப்போது பாரிசான் மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைந்து தேசிய கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) உருவாக்க முயற்சிக்கிறது.
ஸ்லிம் இடைத்தேர்தலில் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்துவதாக ஜூலை 16 ஆம் தேதி, பேராக் பி.கே.ஆர் தலைவர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடோர் ரிசால் முபாரக் கூறினார்.
தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஸ்லிம் இடைத்தேர்தலை அமைத்துள்ளது.