மலேசிய விமானங்களை தடை செய்கிறது கம்போடியா

இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் காரணமாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் விமானங்களை கம்போடியா தடை செய்யும் என்று அறிவித்துள்ளது.

இந்த தடை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று கெமர் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை, மலேசிய மற்றும் இந்தோனேசிய விமானங்களில் இருந்து வரும் பயணிகள் மீது சுகாதார அமைச்சினால் கண்டறியப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று கம்போடிய செய்தித்தாள் அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோளிட்டுள்ளது.

மலேசிய மற்றும் இந்தோனேசிய விமானங்களில் பயணிகள் சம்பந்தப்பட்ட 108 கோவிட்-19 பாதிப்புகளை கம்போடியா பதிவு செய்துள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

கம்போடியா விமானங்களுக்கான போக்குவரத்து மையமாக மலேசியா அமைந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்புகளில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து மலேசியாவில் பயணம் செய்யும் விமானங்களிலிருந்து வந்தவை என்று அறிக்கை கூறுகிறது.

தற்போது, மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மற்ற வெளிநாட்டவர்கள் மலேசியாவில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்ராஜெயாவும் தனது குடிநுழைவு தடுப்பு முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது.

கம்போடியாவின் தடை அடுத்த மாதம் அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடிய கோவிட்-19 குழுவின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இந்தத் தடை நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.