கோவிட்-19: 13 புதிய பாதிப்புகள், ஒரு வாரத்திற்குப் பிறகு ஓர் இறப்பு

இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி 13 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 173 ஆக உள்ளன என்று கூறினார்.

மொத்தத்தில், 10 பாதிப்புகள் உள்நாட்டில் ஏற்பட்டவை, மற்ற மூன்று பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

“நாட்டில் ஏற்பட்ட 10 பாதிப்புகளில், ஒரு பாதிப்பு மலேசியர் அல்லாதவரிடமும், ஒன்பது பாதிப்புகள் மலேசியர்களிடமும் உள்ளன” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்று இறக்குமதி பாதிப்புகள் பாகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த ஒரு மலேசியர் மற்றும் இரண்டு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

ஒரு வாரத்திற்குப் பிறகு மற்றொரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

சமீபத்திய இறப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவின் பின்னணியுடன் இருந்த 63 வயதான மலேசிய பெண் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும்.

பாதிக்கப்பட்டவருக்கு ஜூலை 3 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்துள்ளன. ஜூலை 9 ஆம் தேதி அங்கு சிகிச்சை பெற்று, அதே நாளில் கூச்சிங் பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

“அவர் ஜூலை 26, 2020 அன்று அதிகாலை 12.04 மணிக்கு இறந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இரண்டு நேர்மறையான கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையில், ஜூலை 24 ஆம் தேதிக்கு முன்னர் மலேசியா திரும்பிய பயணிகள் வீட்டில் கண்காணிப்பு உத்தரவுகளுக்கு உட்படுத்தப்படும்போது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தினார்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் தங்கியிருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பது அந்த நிபந்தனைகளில் அடங்கும்.