யாயாசன் அகால்பூடியின் வங்கிகணக்கில் பணத்தை வைப்பு செய்யும் நோக்கத்திற்காக, தன்னிடம் பணத்தை ஒப்படைத்த நன்கொடையாளர்களில் யாயாசன் அல்-புகாரி அறக்கட்டளை இருப்பதாக அன்னியச் செலாவனி வணிகர் ஓமார் அலி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்திப்பில், அகால்பூடி அறக்கட்டளை வங்கி கணக்கை நிர்வகிக்க அகமட் ஜாஹிட் தனது உதவியைக் நாடியதாகவும், வங்கி கணக்கு எண்ணை அவரிடம் ஒப்படைத்ததாகவும் ஓமார் அலி கூறினார்.
“சில நன்கொடையாளர்கள் அல்லது பங்களிப்பாளர்கள் என்னை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பார்கள் என்று அகமட் ஜாஹிட் என்னிடம் ஒரு முறை சொன்னார்.”
“அவர்களிடமிருந்து பணத்தை பெற்று, காசோலை வடிவில் மாற்றி, பின் அதை அகால்பூடி அறக்கட்டளை வங்கி கணக்கில் வைக்கும்படி அகமட் ஜாஹிட் என்னிடம் கேட்டார்.”
“என்னை தொடர்பு கொள்ளும் அனைத்து நன்கொடையாளர்கள், பங்களிப்பாளர்களும் யாயாசான் அல்-புகாரியை சார்ந்தவர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று 27வது நாளாக நடைபெரும் அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட ஊழல், பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி விசாரணையில் 81வது சாட்சியாக ஓமார் அலி சாட்சியம் அளித்தார்.
சுமார் ஒரு வாரம் கழித்து, அல்-புகாரி அறக்கட்டளையின் பணத்தை ஒப்படைக்க அறிமுகம் இல்லாத ஒருவரால் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அந்த பணம், பெட்டியில் ஃபாரன்ஹீட் பிளாசாவின் (Plaza Fahrenheit) தரை தளத்தில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஒமர் அலி விளக்கினார்.
இருப்பினும், துணை அரசு வக்கீல் ஹாரிஸ் ஓங் முகமட் ஜெப்ரி ஓங் விசாரித்தபோது, முதல் முறையாக பெறப்பட்ட தொகையின் மதிப்பு தனக்கு நினைவில் இல்லை என்று ஒப்புக்கொண்டார் ஓமார்.
பின்னர், அவரை அல்-புகாரி அறக்கட்டளையைச் சேர்ந்த அறிமுகமில்லாத நபர்கள் அதே வழியில் தொடர்பு கொண்டனர் என்றும், மேலும் பணம் ஃபாரன்ஹீட் பிளாசாவின் (Plaza Fahrenheit) தரை தளம், மேரியட் ஹோட்டலின் (Hotel Marriot) லாபி மற்றும் கிராண்ட் மெலினியம் ஹோட்டலின் (Grand Mellenium) லாபி ஆகிய இடங்களில் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆண்களை சந்தித்ததாகவும் கூறினார்.
“ஒவ்வொரு முறையும் நான் ஒரு காசோலையைப் பெற்ற பின், அதை அகால்பூடி அறக்கட்டளை வங்கி கணக்கில் வைப்பேன், மேலும் காசோலை வைப்பு சீட்டை ஆதாரமாக வைத்திருப்பேன். பின்னர் அந்த சீட்டு அகமட் ஜாஹிதிடம் ஒப்படைக்கப்படும்.” என்று அவர் கூறினார்,
எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்படி பெறப்பட்ட பணத்தை ஒரு காசோலையாக மாற்றி லூயிஸ் அண்ட் கோ (Lewis & Co.) வங்கி கணக்கில் வைக்குமாறு அகமட் ஜாஹித் அவர்களால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
27வது குற்றச்சாட்டின் படி, அகமட் ஜாஹிட், மார்ச் 29, 2016 முதல் ஜூலை 15, 2016 வரை, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஓமார் அலியின் மூலம் அகமட் ஜாஹிட் தனது சார்பாக RM6,885,300.20 தொகையை 30 காசோலைகளாக மாற்றுமாறு உத்தரவிட்டதன் மூலம் அவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேராவின் முன் விசாரணை நடக்கிறது.