முன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்சீர் RM60 மில்லியனை “பரிசாக” கேட்டார்

ரோஸ்மா வழக்கு | மஹாட்சீர் காலித் கல்வி அமைச்சராக இருந்தபோது, ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் (ஜெப்பாக்)/Jepak Holdings Sdn Bhd (Jepak) நிறுவனத்திடமிருந்து RM60 மில்லியனை “பரிசாக” பெற விரும்புவதாகக் கூறியதாக ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் முன்னாள் வணிக பங்குதாரர் ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா தெரிவித்துள்ளார். சரவாக் கிராமப்புறத்தில் உள்ள 369 பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் மதிப்புள்ள சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பேரில் அவர் அந்நிறுவனத்திடமிருந்து அத்தொகையை கேட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல் விசாரணையில் அரசு தரப்பு சாட்சியாக ரேயன் சாட்சியமளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

பிப்ரவரி 11 அன்று, ஒவ்வொரு மாதமும் தலா RM1 மில்லியன் என, ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை செலுத்துவதற்கு ஈடாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுவதை முன்னதாக மஹாட்சீர் மறுத்துள்ளார்.

மஹாட்சீர் ஆரம்பத்தில், ஜெப்பாக்கிலிருந்து மொத்தம் 20 சதவீத தொகையை “பரிசாக” பெற விரும்பினார் என்று இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ரோஸ்மாவின் வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காதிரின் குறுக்கு விசாரணையின் போது, ரேயன் கூறினார்.

மஹாட்சீர் தனது ப்ராக்ஸி என்று கூறப்படும் முகமட் புவாட் யாசின் என்ற தனிநபர் மூலம் இதைச் செய்ததாக ரேயன் கூறினார்.

நவம்பர் 5, 2018 அன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் உதவ புவாட்டை தேடியதாக கூறப்படுகிறது.

இன்றைய விசாரணையின்போது, இந்த திட்டத்தை சுற்றி உள்ள ஊழலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அது குறித்து ஒரு போலீஸ் புகாரையும் செய்ததாகவும் ரேயன் உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.

ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு சிதறிய வீட்டில் இருந்து வந்ததால் அவருக்கு, நடக்கும் விடயங்கள் குறித்து உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.

“அரசியல்வாதிகளுக்கு (பணம்) கொடுப்பதற்கு பதிலாக, அந்த பகுதி குடியிருப்பாளர்களுக்கு கொடுப்பது நல்லது” என்று அவர் கூறினார்.

நீதிபதி முகமது ஜெய்னி மஸ்லான் முன் விசாரணை நாளையும் தொடரும்.

ரோஸ்மா RM187.5 மில்லியன் லஞ்சம் கோரிய ஒரு குற்றச்சாட்டையும், RM6.5 மில்லியன் லஞ்சம் பெற்ற இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.