கோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு, இறப்புகள் ஏதும் இல்லை

இன்று ஒரே ஒரு புதிய பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் கோவிட்-19 மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நேர்மறையான பாதிப்புகளின் எண்ணிக்கை 9,002 என்றும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 193 என்றும் கூறினார்.

“நாட்டில் தொற்று ஏற்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்ட ஒரு புதிய பாதிப்பு, பெர்லிஸின் துவாங்கு பெளசியா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட மலேசியர் சம்பந்தப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.”

“வெளிநாட்டிலிருந்து தொற்றுநோய்களின் இறக்குமதி பாதிப்புகள் இன்று பதிவாகவில்லை.”

“தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) நேர்மறையான பாதிப்புகள் எதுவும் இல்லை. இறப்புகளில் அதிகரிப்பு எதுவும் இன்று தெரிவிக்கப்படவில்லை.” என்று கோலாலம்பூரில் கோவிட்-19 இன் வளர்ச்சி குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டாக்டர் நூர் ஹிஷாம், இன்று 16 பாதிப்புகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், இது கோவிட்-19 பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை 8,684 ஆக கொண்டுவந்துள்ளது அல்லது மொத்த பாதிப்புகளில் 96.5 சதவீதம் ஆகும் என்று தெரிவித்தார்.