புதிய கட்சியை தொடங்கினார் டாக்டர் மகாதீர்!

பெர்சத்துவை போலவே மலாய்க்காரர்களுக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு கட்சியை டாக்டர் மகாதீர் முகமட் அமைப்பதாக அறிவித்தார்.

எவ்வாறாயினும், பெயரிடப்படாத இந்த புதிய கட்சி பாக்காத்தான் ஹராப்பான், தேசிய கூட்டணி அல்லது எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாது என்று அவர் விளக்கினார்.

வாரிசானுடன் சேர்ந்து மூன்றாவது படையை உருவாக்குவீர்களா என்று கேட்டபோது அவர் இந்த பதிலைக் கொடுத்தார்.

புதிய பலத்துடன் பாக்காத்தானில் உள்ள தனது முன்னாள் நண்பர்களுடன் ஏன் இணைந்து செயல்படவில்லை என்று கேட்டதற்கு, பி.கே.ஆருடன் “சிக்கல்” இருப்பதாக மகாதீர் கூறினார்.

“நாங்கள் பாக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், ஆனால் பாக்காத்தான் போன்ற மிகப்பெரிய கட்சியுடன் எங்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. அதைக் குறிப்பிட நான் விரும்பவில்லை, ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

புதிய கட்சியின் போராட்டத்தின் அடிப்படையை பற்றி மேலும் விளக்கிய டாக்டர் மகாதீர், ஊழல் மற்றும் கிளெப்டோக்ராசி ஆகியவற்றை ஒழிப்பதே அதன் குறிக்கோள் என்று வலியுறுத்தினார்.

தற்காலிகமாக புதிய கட்சியின் தலைவராக மகாதீர் மற்றும் அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் தலைவராக வழிநடத்துவார்கள்.

இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் பெர்சத்து தலைவர் மர்சுகி யஹ்யா, குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருதீன் ஹம்சா மற்றும் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் சல்லே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலேசியர் அல்லாதவர்களின் உறுப்பியம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தவர்களின் நலன்களையும் கட்சி கவனிக்கும் என்று டாக்டர் மகாதீர் விளக்கினார்.