கட்சியை விட்டு வெளியேறும் பெர்சத்து தலைவர்கள்

பெர்சத்து உச்ச மன்றத்தின் (எம்.பி.டி) மற்றொரு உறுப்பினர் இன்று கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு விசுவாசமாக கருதப்படும் உல்யா அகமா ஹுசமுடின் பெர்சத்துவை விட்டு வெளியேறி கட்சியில் பொறுப்பேற்றிருந்த அனைத்து பதவிகளையும் கைவிடும் தனது முடிவை இன்று அறிவித்தார்.

பெர்சத்து இளைஞர் பிரிவின் தகவல் தொடர்பு தலைவரான உல்யா, தேசிய மட்டத்திலும், போக்கோக் சேனா தொகுதியிலும் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார்.

முன்னதாக, ஏ காதிர் ஜாசின், தாரிக் இஸ்மாயில் முஸ்தபா மற்றும் அபுபக்கார் யாஹ்யா ஆகியோரும் இதே போன்ற முடிவுகளை எடுத்து பெர்சத்துவை விட்டு வெளியேறினர்.

மலாய்க்காரர்கள் சார்ந்த ஒரு புதிய கட்சியை உருவாக்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகும் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இன்று காலை, அர்மடா உருப்பினர் அபு ஹபீஸ் சல்லே ஹுடினும் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான புதிய கட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பெர்சத்து கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

பெர்சத்துவை விட்டு வெளியேறிய மற்ற தலைவர்களில் சிலாங்கூரில் ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷைட் ரோஸ்லி ஆவார். இதனிடையே, பெர்சத்து கிள்ளான் பிரிவும் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜொகூரிலிருந்தும் கட்சியை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அம்மாநிலத்தின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.