எம்.ஏ.சி.சி தலைமையகம் வசதியான தங்கும் விடுதி என்று நினைத்தீர்களா என்ன? – நஜிப்

புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் ஓர் இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிறந்த சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறிய லிம் குவான் எங்கின் அறிக்கை குறித்து நஜிப் ரசாக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு முறை அல்ல, இரண்டு முறை கைது செய்யப்பட்டார் என்றும், அப்போது எம்.ஏ.சி.சி பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் இருந்தது என்றும் நஜிப் வலியுறுத்தினார்.

“ஓர் இரவைக் கழிப்பதற்கு எம்.ஏ.சி.சி எனக்கு ஒரு வசதியான தங்கும் விடுதி என்று நீங்கள் நினைத்தீர்களா அல்லது உங்கள் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் இருந்த எம்.ஏ.சி.சி எனக்கு சலுகையைத் தான் தந்திருக்குமா?”

“உங்களைப் போலல்லாமல், நான் எம்.ஏ.சி.சி-யால் இரண்டு முறை தடுத்து வைக்கப்பட்டேன் – ஜூலை 2018 இல் எஸ்.ஆர்.சி வழக்குக்காகவும், மீண்டும் செப்டம்பர் 2018 இல் 1எம்.டி.பி வழக்குக்காகவும் தடுத்து வைக்கப்பட்டேன்.”

“அது மட்டுமல்லாமல், வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட உங்கள் மனைவியைப் போலல்லாமல் என் மனைவி எம்.ஏ.சி.சி-யில் இரவைக் கழிக்க நேரிட்டது” என்று அவர் இன்று பிற்பகல் மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், நஜிப் இரண்டு இரவுகளை லாக்கப்பில் கழித்தாரா மற்றும் லிம் போன்று தடுத்து வைக்கப்பட்டு ஆரஞ்சு ஆடைகளை அணிந்தாரா என்று குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், வியாழக்கிழமை இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்த லிம், நஜிப்பைப் போலல்லாமல், தலையணைகள், மெத்தைகள் இல்லாமல் பலகை தரையில் தூங்கியதாகக் கூறினார். எம்.ஏ.சி.சி பாகுபாடு காட்டுவதாக விவரித்து விளக்கம் கேட்டுள்ளார் லிம்.

“ஒரு ஆண் மகனாக இருந்து, ஒரு உண்மையான மனிதனைப் போல நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுங்கள். என்னைக் குறை கூறாதீர்கள், தேசிய கூட்டணி அரசாங்கத்தையோ அல்லது வேறு யாரையாவது குறை கூறுங்கள்” என்று நஜீப் மேலும் விளக்கினார்.