அன்வார், டிஏபி-யை வீழ்த்த வேண்டும் என்று கூறுவது உண்மை இல்லை – மகாதீர்

ஜாஹித் அரிப் மலேசியாவின் மிகப்பெரிய அரசியல் பொய்யர் – மகாதீர்

நேர்காணல்: தனது முன்னாள் அரசியல் செயலாளர் செனட்டர் முகமட் ஜாஹித் அரிப்பை மலேசிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர் என்று வர்ணித்துள்ளார் டாக்டர் மகாதீர் முகமட்

“ஷெரட்டன் நகர்வு” காரணமாக பாக்காத்தான் ஹராப்பானின் (பிஹெச்) வீழ்ச்சியைக் கண்டு முன்னாள் பிரதமர் மனநிறைவுடன் சிரித்தார் என்று கூறியுள்ள ஜாஹித்தின் அறிக்கை குறித்து மகாதீர் அவ்வாறு கூறியுள்ளார்.

“ஜாஹித் மலேசிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர். அவர் முதலில் அன்வாரை ஆதரித்தார், பின்னர் அன்வாரை நிராகரித்தார். அதன் பின்னர் என்னை ஆதரித்தார். பின்னர் என்னையும் நிராகரித்தார்.”

“தனது சொந்த நலனுக்காக அவர் பல்வேறு வழிகளில் பொய் சொல்ல தயாராக இருக்கிறார். ஆம், அவர் என்னையும் தனது நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்கிறார்.”

“அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து என்னால் உதவ முடியவில்லை. மலேசியாவில் சட்டத்தைப் பின்பற்றுகிறோம், கட்சி உறுப்பினர் தவறு செய்தால் அது தவறு தான் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் கோபப்பட்டார். அவர் பாதுகாப்பாக இருக்க அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்க விரும்பினார்,” என்று அவர் இன்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“ஷெரட்டன் நகர்வின்” மூலம் பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு தூண்டுதலாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை செப்டம்பர் 7 ஆம் தேதி ஜாஹித் மறுத்தார்.

எவ்வாறாயினும், பி.கே.ஆர் மற்றும் டிஏபி தலைவர்களைத் தடுக்கும் முயற்சியில் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட ஜாஹித், அதற்கு அப்போது பிரதமராக இருந்த மகாதீரின் ஒப்புதலும் ஆதரவும் இருந்ததாகக் கூறினார்.

கூச்சிங்கில் ஒரு தங்கும்விடுதி வாங்கியது தொடர்பாக முன்னாள் ஃபெல்டா தலைவர் ஈசா சமாத் எதிர்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஜாஹித் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அந்த வழக்கில் ஜாகித் ஆகஸ்ட் 2017 இல் எம்.ஏ.சி.சி-யால் கைது செய்யப்பட்டு எட்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், அவர் பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்று நினைத்ததால், அரசாங்கம் மாறியபோது ஜாஹித் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்று மகாதீர் கூறினார்.

அன்வார் மற்றும் டிஏபி தரப்பினரை தான் தடுக்க விரும்புவதாக கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று மகாதீர் மேலும் கூறினார்.

“அன்வாரை வீழ்த்த வேண்டும், டிஏபி வீழ்ச்சியடைய வேண்டும் என்று நான் விரும்புவதாகக் கூறுவது உண்மை இல்லை. எனக்கு டிஏபியுடன் எந்த பிரச்சனையும் இல்லை. அன்வாருக்கு என்னுடன் பிரச்சினை இருக்கிறது, ஆனால் எனக்கு அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை.”

டிஏபி-யை கையாள்வதிலும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் மகாதீர்.