கிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் பாஸ் ஆதிக்கம் செலுத்தும் – ஹாடி

தேசிய கூட்டணி (பிஎன்) மற்றும் தேசிய ஒருமித்த கட்சிகளுக்கும் (எம்என்) இடையில் 15வது பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது என்றும், ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

கிளந்தான், திரங்கானு, மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்றும் அப்துல் ஹாடி கூறினார்.

பாஸ், கடந்த ஆண்டு தேசிய ஒருமித்த கட்சியின் மூலம் அம்னோவுடன் முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. பின்னர், பெர்சத்து தலைமையிலான தேசிய கூட்டணியையும் ஏற்றுக்கொண்டது.

செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தலில் குறைந்தது 10 தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிய போதிலும், பாஸ் கட்சிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 50 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு நேற்று பாஸ் இளைஞர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இதற்கிடையில், தற்போதைய அரசியல் ஒத்துழைப்பில் தனது கட்சி மிகவும் திருப்தி அடைந்துள்ளது என்றும் அப்துல் ஹாடி கூறினார்.

“நான் மிகவும் திருப்தி அடைகிறேன், இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதை வலுப்படுத்த இன்னும் நிறைய வேலைகள் உள்ளன” என்று அவர் கூறினார்.