அண்மையில் கோவிட் 19 பாதிப்புகள் அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் முகிதீன் யாசின் கவலை தெரிவித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்த நேரிட்டால் அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் 615 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், முக்கிய மூன்று மாவட்டங்கள் அதாவது கெடாவில் கோத்தா செடார், தாவாவ் மற்றும் சபாவில் லாஹாட் டத்து ஆகியவை இப்போது சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இன்றிரவு நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில் முகிதீன் தெரிவித்தார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்த நேரிட்டால் அதன் விளைவாக, நிச்சயமாக நம் வாழ்க்கைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகவும் மோசமானதாக அமையும். இந்நேரத்தில் கெடாவின் கோத்தா செட்டாரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது போல் நாம் எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் தனியாக இருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.
அதிக கோவிட்-19 பாதிப்புகளைப் பதிவுசெய்த பகுதிகளில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்த அரசாங்கம் தயங்காது என்று முகிதீன் கூறினார்.
“கோவிட்-19 தினசரி பாதிப்பு இன்னும் பூஜ்ஜியத்தை எட்டாமலேயே உள்ளது. இதனால் மலேசியாவில் கோவிட்-19 தொற்று சங்கிலி இன்னும் முழுமையாக உடைக்கப்படவில்லை என்றே தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இன்றைய நிலவரப்படி, மலேசியாவில் இன்னும் 632 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டின் எல்லையைத் திறக்க மலேசியா அவசரப்படாது என்றும், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டினுள் நுழைவதைத் தடுக்க தொடர்ந்து இறுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“நோய்த்தொற்றின் பரவலைச் சமாளிக்க குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லாத நிலையில், நீங்கள் தற்போது கடைப்பிடித்து வரும் புதிய நடைமுறைகள் மிகவும் முக்கியமானதாகும்” என்று அவர் மேலும் கூறினார்.