உயர் கல்வி அமைச்சர் நோரைனி: சிரமப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உதவ முன்வரவேண்டும்

கோவிட் 19 நோய் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து பொது பல்கலைக்கழக  புதிய மாணவர்களுக்கான பதிவு  நாள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்திற்கு உயர் கல்வி அமைச்சர் நோரைனி அகமது மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று  பல்கலைக்கழகத்தின் முதல் நாள் தொடங்க திட்டமிடப்பட்டது.  ஆனால், உயர்கல்வி அமைச்சின் ஆலோசனை நேற்று மட்டுமே வழங்கப்பட்டது.

பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முதல் நாளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்துள்ளனர்.பதிவு நாள் ரத்துசெய்யப்பட்ட செய்தி 11 மணி நேரத்திற்கு பிறகே பல்கலைக்கழகங்களை வந்தடைந்துள்ளது.

“பதிவுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழகங்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்நோக்கிய சிரமங்களை நான் கவனத்தில் கொள்கிறேன். அதற்க்காக மன்னிப்பு கோருகிறேன். மேலும் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று நோரெய்னி இன்று பேஸ்புக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“கோவிட் 19 வழக்குகளின் அதிகரிப்பு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. தொற்றுநோயை நிர்வகிக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அனைத்து பொது பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்துடன் விவாதிக்கும்,” என்று அவர் கூறினார்.

உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு இடமளிக்குமாறு பொது பல்கலைக்கழகங்களுக்கு நோரைனி வலியுறுத்தினார்.

“ஒத்திவைப்பிலிருந்து எழும் அனைத்து சிக்கல்களையும் நிர்வகிப்பதில் பொது பல்கலைக்கழகங்கள் அக்கறையுடன் செயல்படும்  என நான் நம்புகிறேன். பல்கலைக்கழங்களை வந்தடைந்த  மாணவர்களுக்கு, அவர்கள் வளாகத்தில் தங்கியிருந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுகளுக்கு காத்திருக்கலாம்.”

“இன்னும் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் பல்கலைக்கழகத்திற்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.