கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் இயக்க கட்டுப்பாட்டு ஆணைக்கான உத்தரவை புத்ராஜெயா அறிவித்தது.
சிறைச்சாலையில் கோவிட் -19 நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுகாதார அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 14 நாட்களுக்கு சிறைச்சாலைக்குள்ளும் அதன் ஊழியர்களுக்கும் இந்த தடை விதிக்கப்படும்.
இயக்க கட்டுப்பாட்டு காலம் முழுவதும், கைதிகளின் குடும்பங்களின் வருகைகள் உட்பட, அந்த பகுதியில் எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படாது.
நேற்று நாடு முழுவதும் பதிவான 317 புதியதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையில் , 102 நோய்த்தொற்றுகள் கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இதில் சபாவிலிருந்து திரும்பிய இரண்டு நோயாளிகளும் உள்ளனர்.
இதற்கிடையில், கட்டுப்பாடு விதிகளை மீறியதற்காக 433 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 60 பேர் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், 345 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.