தெரசா கோக்: பழைய புகாரின் அடிப்படையில் செம்பனை எண்ணையை தடை செய்ததில் நியாயமில்லை

முன்னாள் முதன்மை தொழில்துறை அமைச்சர் தெரசா கோக் மலேசியாவின் செம்பனை எண்ணெய் நிறுவனமான எஃப்ஜிவி ஹோல்டிங்ஸின் (FGV Holdings) தொழிலாளர் நடைமுறைகள் குறித்து விசாரிக்க புலனாய்வுக் குழுவை மலேசியாவுக்கு அனுப்புமாறு அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளார்.

செப்புதே பாராளுமன்ற உறுப்பினரான தெரசா கோக், எஃப்ஜிவி ஹோல்ட்டிங்ஸ் மீது  செம்பனை எண்ணெய்  தயாரிப்புகளுக்கு எதிரான தடை நியாயமற்றது என்றும் பழைய பிரச்சினையின் அடிப்படையில் இந்த தடை அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உற்பத்தி பகுதியில் தொழிலாளர்களை கட்டாயத்தின் பேரில் வேலை செய்ய வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு எஃப்ஜிவியிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிராக , பாலியல் துன்புறுத்தல்கள்,மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள், தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களை பறித்தல், குழந்தை தொழிலாளர்களை வைத்திருத்தல்,கட்டாயத்தின் பேரில் வேலை செய்ய வைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு வருட கால விசாரணைக்கு பிறகு இந்தத் தடை அமல்படுத்தப்பட்டதாக சிபிபி கூறியது.இந்த சம்பவம் 2015 இல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்ந்தது என அவர் கூறினார்.

அதன் பிறகு ,எஃப்ஜிவி நிறுவனம் புகார்களைத் தீர்க்க  பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தெரசா கோக் வாதிடுகிறார். ஐந்து வருடங்கள் கழித்து எந்த வித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் இந்த தடையை சிபிபி பிறப்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.