கெராக்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) சபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தலை (ஜிஇ) விரைவில் நடத்துவேன் என்றப் பிரதமர் முகிதீன் யாசின் அறிக்கை குறித்து டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார்.
இன்று தனது வலைப்பதிவில், ஒரு கிண்டலானப் பதிவில், முகிதின் தனது வாக்குறுதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அதன்பின் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய மகாதீர், “கொள்கையை விட அரசியல் முக்கியமானது” என்றார்.
இருப்பினும், அம்முன்னாள் பிரதமர் தனது பதிவில் முகிதீனின் பெயரைக் குறிப்பிடவில்லை.
“மிக உயர்ந்தப் பதவியில் இருக்கும் தலைவர் கூறினார், அவர் வென்றால் (சபாவில்), ஜிஇ நடைபெறும் என்று
“வாக்குறுதியை மீறாதீர்கள், ஜிஇ-யை நடத்துங்கள் (மற்றும்) நூறாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படட்டும் (கோவிட் -19). அதிகமான மக்கள் இறக்கட்டும்.
“கொள்கைகளை விட அரசியல் முக்கியமானது. எனக்கு என்ன கவலை? எனக்கு கிடைக்கிறது (எனக்கு தேவையானது),” என்று அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, சபா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகிதீனின் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டிருந்தாலும், முகிதீன் உடனடியாக ஜிஇ-ஐ நடத்த வேண்டும் எனும் போக்கைக் காட்டுவது இதுவே முதல் முறை.
“சபாவில் நாம் வென்றால், விரைந்து ஜிஇ நடைபெறும்… ‘நாங்கள் பி.என்-ஐ (பெரிக்காத்தான் நேஷனல்) ஆதரிக்கிறோம், முகிதீன் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மலேசியா தொடர்ந்து முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ அதற்கு ஒரே வழி என்னுடன் இணைவதுதான்,” என்றார் அவர்.
சபாவில் 73 இடங்களில் 38-ஐக் கைப்பற்றி, ஜிஆர்எஸ் வென்றது. இருப்பினும், அம்மாநிலத் தேர்தல் மலேசியாவில் மீண்டும் கோவிட் -19 பெருந்தொற்று பரவக் காரணமாக அமைந்தது.
அம்மாநிலத்திற்குப் பிரச்சாரம் செய்யச் சென்ற அரசியல்வாதிகளால் அத்தொற்று மலேசியா முழுக்க பரவியது.
தற்போது, முகிடின் நிர்வாகத்திற்கு மக்களவையில் இரண்டு பெரும்பான்மை நாற்காலிகளே எஞ்சியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தனது ஆதரவை நிரூபிக்க மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை நாளைச் சந்திக்க உள்ளார்.