புர்சா மலேசியப் பங்குகள் தீவிர வர்த்தகம், விழிப்புணர்வுடன் இருங்கள், அன்வார் வலியுறுத்து

தன்னுடன் தொடர்புடைய புர்சா மலேசியா பங்குகள் தீவிரமாக வர்த்தகமாவதைத் தொடர்ந்து, கவனமுடன் இருக்குமாறு பங்கு முதலீட்டாளர்களுக்கு பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

தீவிரமாகப் பரிவர்த்தனையாகும் பங்குகள் குறித்து, அக்டோபர் 9-ம் தேதி, தி எட்ஜ் மார்க்கெட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க,  எம்.பி.க்களிடமிருந்து “வலுவான மற்றும் உறுதியான ஆதரவையும் பெரும்பான்மையையும்” தான் பெற்றுள்ளதாகவும்; நாளை யாங் டி-பெர்த்துவான் அகோங்கைச் சந்திக்கவுள்ளதாகவும் அன்வர் அறிவித்ததைத் தொடர்ந்து பங்கு பரிவர்த்தனைகள் தீவிரமடைந்துள்ளன.

“புர்சா மலேசியாவில் உள்ள சில கவுண்டர்களில், என் பெயர் தொடர்புடையப் பங்குகள் என வதந்திகள் பரவி வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது உண்மையல்ல. புர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்திலும் எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடன் எனது பெயரை இணைக்கும் வதந்திகள் போலியானவை மற்றும் பங்கு வாங்குபவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவை,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் இலாபம் சம்பாதிக்க விரும்புவோரால் பங்குச் சந்தை கையாளப்படக்கூடாது என்பதனால், அதனைத் தீவிரமாகக் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புர்சா மலேசியா மற்றும் பாதுகாப்பு ஆணையத்தைக் அன்வர் கேட்டுக்கொண்டார்.

தி எட்ஜ் மார்கெட்ஸ் அறிக்கை, மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் மற்றும் பான் மலேசியா ஹோல்டிங்ஸின் பங்குகளைக் குறிக்கிறது. அந்த அறிக்கையின்படி, அன்வாரின் தம்பி ஃபரிசோன் இப்ராஹிம், அந்த இரு நிறுவனங்களிலும் இயக்குநராக உள்ளார்.