அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) மீண்டும் விதிக்க, இன்று கூடிய தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) சிறப்பு அமர்வு முடிவு செய்துள்ளது.
பெட்டாலிங், கோம்பாக் மற்றும் கிள்ளான் வட்டாரங்களில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலேசிய சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி, பி.கே.பி.பி செயல்படுத்தப்பட உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார்.
“இந்தத் தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க, எம்.கே.என்.-இன் சிறப்பு அமர்வு இன்று சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் பி.கே.பி.பி.யை அமல்படுத்த ஒப்புக்கொண்டது. அக்டோபர் 14, நள்ளிரவு 12.01 முதல் அக்டோபர் 27 வரை அது அமலில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
இதன்வழி, மாவட்டத்தைவிட்டு வெளியேறவும் உள்ளே செல்லவும் அனுமதி இல்லை. எவ்வாறாயினும், பணி நிமித்தம் எல்லை தாண்டி செல்ல, வேலை இடங்களின் சிறப்பு பணி அனுமதியைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.
வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க இருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
பள்ளிகள், உயர்க்கல்வி கூடங்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள், மழலையர் பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதேசமயம், சபாவில் இன்று நள்ளிரவு தொடக்கம், அக்டோபர் 26-ம் தேதி வரையில் பி.கே.பி.பி. அமலில் இருக்கும்.
பொருளாதார, தொழில்துறை மற்றும் வணிகத் துறை நடவடிக்கைகள் வழக்கம்போல செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆனால், கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.