மத்திய அரசின் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டுக் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் மாநில அரசு கூறியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் சில இடங்களில் மட்டுமே, கவலைக்கிடமான கோவிட் -19 தொற்றின் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலச் சுகாதார மன்றம் (எம்.கே.என்), சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை, காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு அமைப்புகளுடனான கூட்டத்திற்குத் தலைமையேற்று, பெட்டாலிங் மாவட்டத்தில் பிகேபிபி-ஐ அமல்படுத்துமாறு இப்போதுதான் அறிவித்தேன்.
“கிள்ளான், கோம்பாக், உலுலங்காட் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்தின் ஒருபகுதியில் மட்டும் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும், அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை பிகேபிபி-ஐ அமலாக்கம் செய்வதாகப் பாதுகாப்பு அமைச்சர் சற்றுமுன் அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது.
“சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் போன்ற இடங்கள் பச்சை மற்றும் மஞ்சள் மண்டலங்களாக இன்னும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகள் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக மாநில அரசு கருதுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.