பிகேபிபி : சபா, சிலாங்கூர், கே.எல். மற்றும் புத்ராஜெயாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன

சபாவில், மலேசியக் கல்வி அமைச்சின் (கே.பி.எம்.) கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று முதல் மூடப்படும் நிலையில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ளவை, நாளை, புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) காரணமாக, கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிகள், மழலையர் பள்ளி, விடுதிப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (ஐபிஜி) உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும் என்று நேற்று இரவு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 27 வரை மூடப்படும் என்றும் சபாவில் அக்டோபர் 26 வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த முடிவானது, சபாவில் 511,349 மாணவர்களுடன் 1,336 நிறுவனங்களை உள்ளடக்கும். இதில் முன்னதாகப் பிகேபிபி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மூடப்பட்ட நிறுவனங்கள் அடங்கும்.

சிலாங்கூரில், இது 1,088 கல்வி நிறுவனங்களையும், 935,984 மாணவர்களையும் உள்ளடக்கும், இது கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் முன்பு மூடப்பட்ட பள்ளிகளையும் உள்ளடக்கும்.

“கோலாலம்பூரில் 344 கல்வி நிறுவனங்களையும் 254,639 மாணவர்களையும்; புத்ராஜெயாவில் 31 கல்வி நிறுவனங்களுடன் 31,917 மாணவர்களையும் இது உள்ளடக்கும்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள விடுதிகளைக் கொண்ட கல்வி நிறுவனங்களையும் இது தொடர்புபடுத்தும் என்பதால், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்குமிடத்தில் வசிக்கும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்.

“பெற்றோருக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள், அவர்கள் வரும்வரையில், பள்ளி விடுதிகளிலேயே இருக்கலாம், அவர்களை விடுதியின் வார்டன் கவனித்துகொள்வார்.

“மாணவர்களுக்குத் தேவையான உணவை, பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரும். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும், நிர்வாகம் அவர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிடும்,” என அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக எல்லைகளைக் கடக்கும் பெற்றோருக்கு இது அனுமதி கடிதமாக அமையும்.

“பிகேபிபி காலகட்டத்தில் திட்டமிடப்பட்டபடி சர்வதேச தேர்வுகளுக்கு அமர வேண்டிய மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிடமிருந்து தேர்வில் கலந்துகொள்ள ஓர் அனுமதி கடிதத்தைப் பெற வேண்டும்.

பள்ளி மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில், கற்றல் கற்பித்தல் வீட்டில் இருந்தபடியே நடப்பதைப் பள்ளி முதல்வர்களும் தலைமையாசிரியர்களும் உறுதி செய்வர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு கற்றல் மற்றும் கற்பித்தல் கையேடுகளை www.moe.gov.my எனும் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

-பெர்னாமா