அன்வார் இஸ்தானா நெகாராவைச் சென்று சேர்ந்தார்

அரசாங்க மாற்றம் குறித்த ஊகங்கள் அதிகரித்து வருவதால், பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமின், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடனான சந்திப்பின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்த பி.கே.ஆர். தகவல் இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில், இன்று இஸ்தானா நெகாராவில் அவர்களின் சந்திப்பு குறித்த நேரம் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றார்.

மாமன்னரைச் சந்தித்த பின்னர், உரையாடலின் முடிவை வெளிப்படுத்த, அன்வர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

“எனக்கு அறிவுறுத்தல் கிடைக்கும்போது, விரைவில் அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும் வழங்குவேன்.

“இது மிகவும் தனித்துவமான மற்றும் முக்கியமான சூழ்நிலை என்பதால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று பி.கே.ஆரின் அதிகாரப்பூர்வ ஊடகப் புலனக் குழுவில் பகிரப்பட்ட செய்தியில் பாஹ்மி கூறினார்.

இன்று காலை 9.30 மணியளவில், இஸ்தானா நெகாரா நுழைவாயில் 2-க்கு வெளியே, சுமார் 50 ஊடகத் தொடர்பாளர்கள் காணப்பட்டனர்.

பல போலீஸ் அதிகாரிகளும் நுழைவாயில் அருகே ரோந்துபணியில் இருந்தனர்.

காலை 10.25 மணியளவில், அன்வர் ஒரு கருப்பு ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காரில் அரண்மனைக்குள் நுழைந்தார். ஜன்னல்களை இறக்காமல் , அக்கார் அரண்மனைக்குள் நேராகச் சென்றது.

அரண்மனை அதிகாரிகள் ஊடகவியளாலர்களுக்கு உணவு விநியோகித்தனர்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கையைத் தான் பெற்றுள்ளதாகக் கூறி, அன்வர் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து யாங் டி-பெர்த்துவான் அகோங்கைச் சந்திக்க முயற்சித்து வந்தார்.

அந்த எதிர்க்கட்சித் தலைவர், சரியான எண்ணிக்கையையோ அல்லது அவரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் அடையாளங்களையோ வெளியிடவில்லை, ஆனால் ஒரு வலைத்தளம் அனைத்து கட்சிகளையும் சார்ந்த அந்த 121 எம்.பி.க்களின் பட்டியலையும் வெளியிட்டது.

மலேசியாகினி சோதனையிட்டபோது, கூறப்பட்ட அப்பட்டியலை மீண்டும் அணுகமுடியாமல் போனது. பட்டியலிடப்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை விலக்கிக் கொண்டதாகவும் அல்லது அன்வருக்கான ஆதரவை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சில அம்னோ எம்பிக்கள், ஆராவ் எம்பி, ஷாஹிடான் காசிம் மற்றும் பெசூட் எம்பி, இட்ரிஸ் ஜூசோ போன்றோர் அப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றதற்கு எதிராகப் போலிஸ் புகார் செய்தனர்.

மத்திய சிஐடி இயக்குநர் ஹுசிர் முகமது, இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசாருக்கு ஆறு புகார்கள் கிடைத்ததையும், அன்வர் நேற்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அந்தப் போர்ட்டிக்சன் எம்பிக்கு, இன்று காலை 9 மணிக்கு மட்டுமே நேரம் உள்ளதாக அவரின் செயலாளர் கூறியதால், விசாரணை பிரிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.