இன்று காலை நடந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சமர்ப்பித்ததை மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அவர் அவர்களின் பெயர் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை என்று அரசக் குடும்பத்தின் பேச்சாளர் அஹ்மத் ஃபடில் சம்சுதீன் தெரிவித்தார்.
“சுமார் 25 நிமிடங்கள் நீடித்த அந்த அமர்வில், அன்வர் இப்ராஹிம் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்பி-களின் எண்ணிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். இருப்பினும், தனது வாதத்தை வலுப்படுத்தும் வகையில், அவர்களின் பெயர் பட்டியலை அவர் சமர்ப்பிக்கவில்லை.
“இது தொடர்பாக, பேரரசர் அவர்கள், அன்வரை மத்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்படுமாறும், அதனை மதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்,” என்று அஹ்மத் ஃபாடில் கூறினார்.
அன்வர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்
சற்றுமுன்னர் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தின்போது, 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்கும் உண்மையான ஆவணங்களை மாமன்னரிடம் வழங்கியதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
மாமன்னர் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசவிருப்பதால், பொறுமையாக இருப்பதுதான் நியாயமானது என்றும் மாமன்னர் முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், முகிதீன் யாசின் தலைமையிலான பி.என். நிர்வாகம் “வீழ்ச்சியடைந்துள்ளது” என்று அன்வர் கருதுகிறார்.
அவர் வழிநடத்தவுள்ள புதிய அரசாங்கம் “பெரும்பான்மையான முஸ்லிம்கள் மற்றும் பூமிபுத்ராக்களால் ஆனது” என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால், அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கான உத்தரவாதம், நிச்சயம் பாதுகாக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.