பிரதமர் : நிலைமை மோசமடைந்தால் மீண்டும் பிகேபி

தற்போதுள்ள அணுகுமுறையின் அடிப்படையில், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது, ஆனால் நிலைமை மோசமடைந்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) மீண்டும் செயல்படுத்த மறுப்பதற்கில்லை என்று பிரதமர் முகிடின் யாசின் தெரிவித்தார்.

“முடிந்தவரை நாம் அதைத் (பி.கே.பி) தவிர்க்க விரும்புகிறோம்.

ஆனால், நிலைமை மோசமாகி, தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தால், நமக்குக் (கையாள) கடினமாக இருக்கும்.

“ஆக, பிகேபிதான் அதற்கு வழி,” என்று பிகேபி மீண்டும் செயல்படுத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் கூறினார்.

பொருளாதாரச் சுமை குறித்து, விவரித்த முகிடின், முதல் பிகேபி காலத்தில், கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க அரசாங்கம் சுமார் 300 பில்லியன் ரிங்கிட்டைச் செலவழித்ததாகக் கூறினார்.

“அரசாங்கத்தால் மீண்டும் (இரண்டாவது பிகேபி-யில்) உதவ முடியுமா?

“மக்களுக்கு உதவ நாம் வழிகளைத் தேடுவோம்.

முந்தைய பிகேபி அமலாக்கம், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் முஹைதீன் கூறினார்.

கடந்த ஒரு வாரமாக, கோவிட் -19 தொடர்ந்து அதிகபட்ச பதிவுகளைக் காட்டிவருகிறது. நேற்று, 563 நேர்வுகளும் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

“முன்னதாக, RM2 பில்லியன் சுகாதார அமைச்சுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.