இன்றும், அக்டோபர் 21-ம் தேதியும் நடைபெறவிருந்த பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) இரண்டு மூத்தத் தலைவர்களுடனான பேரரசரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் பேரரசரின் மூத்த அதிகாரியால் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதென்று, இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், அமானா தலைவர் முஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இருவரும் தெரிவித்தனர்.
அந்த அறிக்கையின்படி, லிம் இன்றும், முஹமட் சாபு அடுத்த வாரமும் மாமன்னரைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இரண்டு அமர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மாமன்னரின் மூத்த அதிகாரி நேற்று எங்களுக்கு அறிவித்தார்.
தங்களுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதற்கு எந்தக் காரணத்தையும் குறிப்பிடவில்லை என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
அம்னோ மூத்தத் தலைவரும் குவா முசாங் எம்.பி.-யுமான தெங்கு இரஸாலீக் ஹம்சாவை நேற்று பிற்பகல் மாமன்னர் சந்தித்தார். இவர்கள் இருவர் தவிர, மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அரண்மனை அழைப்பு கொடுத்துள்ளது.
இன்று ம இ கா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் வியாழக்கிழமை பி.என். தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் சம்பந்தப்பட்ட அரச சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
“நாங்கள் இந்த உத்தரவுக்குப் பணிகிறோம். மாட்சிமை தங்கிய யாங் டி-பெர்த்துவான் அகோங், ராஜா பெர்மாய்சுரி அகோங் மற்றும் அவர்களின் அனைத்து உறவினர்களும் உடல்நலமும் நல்வாழ்வும் பெறப் பிரார்த்திக்கிறோம்” என்று இருவரும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.