குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலீ ஹம்சா (கு லி), மிக நீண்டகாலம் அரசியல் பணியில் இருக்கும் ஒரு மூத்தத் தலைவர் என்ற வகையிலேயே, யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவரை நேற்று இஸ்தானா நெகாராவில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, அந்த மூத்த அரசியல்வாதியின் கருத்தை ஆட்சியாளர் அறிய விரும்பியதால், அவரைச் சந்திக்க அழைப்புவிடுக்கப்பட்டது என்று தெங்கு ரஸாலீயின் அரசியல் செயலாளர் முஹமட் லோக்மன் கானி கூறினார்.
“தெங்கு ரஸாலீ தனது கருத்துக்களை மன்னருடன் பகிர்ந்துகொண்டார், எனக்குத் தெரிந்தவை அவ்வளவுதான்.
“நாட்டின் அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் மிகவும் முதிர்ச்சியடைந்த தலைவராகவும், மலேசியாவின் அனைத்து பிரதமர்களுடனும் பணியாற்றியத் தனிநபராகவும் கு லி திகழ்வதால் அரசரைச் சந்திக்க வரவழைக்கப்பட்டார்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
இந்தச் சந்திப்பில், 83 வயதான அந்த அரசியல்வாதியின், அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் அல்லது கட்சியின் பிரதிநிதி எனும் வகையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் லோக்மேன் கூறினார்.
நேற்று, 1974 முதல் எம்.பி.யாக பணியாற்றிவரும் தெங்கு ரஸாலீயை ஏற்றிச் சென்ற வாகனம், மதியம் 2.40 மணியளவில் இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறியது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தான் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக 120-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் கூறி மன்னரைச் சந்தித்தார்.
- பெர்னாமா