அம்னோவின் ஆதரவு தேசியக் கூட்டணிக்கே, ‘அரசியல் போர்நிறுத்த’த்திற்கு அழைப்பு

தேசியக் கூட்டணிக்கான (பி.என்.) தனது ஆதரவை மறுபரிசீலனை செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஓர் “அரசியல் போர்நிறுத்தத்திற்கு” தற்போது அம்னோ அழைப்பு விடுத்துள்ளது.

இது அனைத்து பிஎன் கட்சிகளுடனான ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அம்னோ தலைவரான அஹ்மத் ஜாஹித் ஹமிடி, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் கொண்ட நான்கு அம்ச அறிக்கையின் வழி இதனை அறிவித்தார்.

“கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றைக் கையாள்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசியல் போர்நிறுத்தத்தைக் கட்சி விரும்புகிறது.

“கோவிட் -19 அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்நேரத்தில், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பி.என். அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனான ஒத்துழைப்பையும் பலப்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி, ஜாஹித் தலைமையிலான அம்னோ, பி.என்.க்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, பி.என். அரசாங்கத்துடனான அதன் ஒத்துழைப்பைத் தொடரப் புதிய விதிமுறைகளையும் அமைத்தது.