கோவிட் -19 பற்றி விவாதிக்க, நாளை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

நாளை நடைபெறவுள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை மறுசீரமைப்புக்கானது அல்ல என்று நம்பப்படுகிறது. அதற்குப் பதிலாக, கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள்வது குறித்த விவாதமாக அது அமையும் என ஓர் ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

அந்தக் கூட்டத்திற்குப் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமை தாங்குவார் என்றும், கோவிட் -19 தொற்றுநோயின் சமீபத்திய நிலைமை மற்றும் அந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்க விரும்புவதாக அத்தரப்பு கூறியது.

எனினும், நாளைய அக்கூட்டம் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. காரணம், நேற்று புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து, முஹைதீன் ஒரு வீடியோ மாநாட்டின் மூலம் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

கடந்த வாரம் முதல் முறையாக வீடியோ மாநாட்டில் கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறிய முஹைதீன், இது இரண்டாவது முறை என்று நேற்று கூறினார்.

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்திற்கு, அம்னோ புதிய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பின்னர், முஹைதீனின் பிரதமர் பதவி பலரின் கவனத்தை ஈர்த்தது.

இருப்பினும், நேற்று அம்னோ தலைவர் ஜாஹித் ஹமிடி, பி.என்.-க்கான அம்னோவின் ஆதரவை உறுதிபடுத்தினார்.

இதற்கிடையில், கோவிட் -19 பற்றிய விவாதங்களுடன், பி.என். அரசாங்கத்திற்கான ஆதரவு குறித்தும் பேசப்படும் என மற்றொரு ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியது.

இருப்பினும், அது அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பானது அல்ல என்று அவர் கூறினார்.

நாளை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளதை உறுதிப்படுத்திய, பிரதமர் அலுவலகம், அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.