கோவிட் -19 | முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், கோவிட் -19 மூன்றாவது அலையில், 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
“இச்செய்தியைப் படித்து, பள்ளிகளில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் அவலநிலையை எண்ணி நான் வருத்தமடைந்துள்ளேன்,” என்று நேற்று இரவு ஒரு முகநூல் பதிவில் அவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 20 முதல் நேற்று வரையில், 7 முதல் 12 வயது வரையிலான மாணவர்களில் மொத்தம் 587 பாதிப்புகளும் 13 முதல் 18 வயதுடையவர்களில் 670 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று, செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் கூறியிருந்தார்.
மாஸ்லீ இந்நிலைமைக்கு எந்தவொரு குறிப்பிட்ட தீர்வுகளையும் பரிந்துரைக்கவில்லை, ஆனால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சிறந்ததைச் செய்யுமாறு வலியுறுத்தினார்.
“பெற்றோர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மூலம் பள்ளிகளுடன் கலந்து பேசி, சிறந்த முடிவை எடுங்கள், குழந்தைகள் எப்போதும் (சமூக இடைவெளி) செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுங்கள்.
“ஆசிரியர்களைப் பிரதிநிதிக்கும் என்.யு.டி.பி., எந்த முடிவை எடுத்தாலும், ஆசிரியர்களின் உடல்நலத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
கோவிட் – 19 மூன்றாவது அலையில், மாணவர்களிடையே நோய்த்தொற்று அதிகரிப்பதைத் தவிர்க்க, நாட்டில் 12 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் கல்வி மையங்கள் என மொத்தம் 74 பள்ளிகளில் கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக மலேசியாகினி பட்டியலிட்டுள்ளது.
பள்ளிகள், மாவட்டக் கல்வி இலாகாக்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் மலேசியாகினியின் தொகுப்பு அமைந்துள்ளது.