கோவிட் -19 | கோவிட் -19 பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை விலையை RM150-லிருந்து RM50-ஆக குறைக்க வேண்டும் என்று டிஏபி கிள்ளான் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், கிள்ளானில் அதிகமான பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக மாறி வருவதால், மக்கள் அவர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளனர்.
கோவிட் -19 தொற்று ஒரு சில குடியிருப்பு பகுதிகளைத் தாக்கியுள்ளதாக எனது அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது, ஆனால் அக்கம் பக்கங்களில் அல்லது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏன் இன்னும் பிணிப்பாய்வு (screening) வழங்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மேலும், குடியிருப்பாளர்கள் மருத்துவமனை அல்லது பொது சுகாதாரக் கிளினிக்குகளில் கோவிட் -19 பிணிப்பாய்வு மேற்கொள்ள, ஒரு நபருக்கு RM150 செலுத்த வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கோவிட் பிணிப்பாய்வு செலவை RM150-லிருந்து RM50-ஆக குறைப்பது குறித்து பரிசீலிக்க, நான் சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் விண்ணப்பித்துள்ளேன்,” என்று அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செலவைக் குறைப்பது, குடியிருப்பாளர்களிடையே சோதனை மேற்கொள்வதை ஊக்குவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும் என்று சார்லஸ் கூறினார்.
கோவிட் -19 மூன்றாவது அலையில், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, சிலாங்கூரில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (சி.எம்.சி.ஓ) கீழ் வைக்கப்பட்ட முதல் பகுதி கிள்ளான் ஆகும்.
அக்டோபர் 20 ஆம் தேதி நிலவரப்படி, மலேசியா முழுவதும், மொத்தம் 26 சுகாதார மாவட்டங்கள் மற்றும் 46 துணை மாவட்டங்கள் கோவிட் -19 சிவப்பு மண்டலங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.