அவசரகாலத்தைப் பிரகடனம் செய்ய, மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு அரசாங்கம் பரிந்துரைக்கும் எனும் ஊகங்கள் அதிகரித்துவரும் வேளையில், முக்கியச் செய்தி ஊடகங்களின் அறிக்கைகளும் அவற்றைப் பலப்படுத்தி வருகின்றன.
இருப்பினும், இதுவரை, பிரதமர் முஹைதீன் யாசின் அத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் புத்ராஜெயாவில் இல்லை.
தற்போதைய கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கு, அவசரக்கால அறிவிப்பு சிறந்ததொரு வழி என்று கூறப்படுகிறது.
இருப்பினும், மக்களவையில் பெரும்பான்மை இல்லாவிட்டால், தேர்தலுக்கு வழிவிடும் வகையில், முஹைதீன் நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் இருக்க ஒரு வழியாகவும் இது கருதப்படுகிறது.
ஏனென்றால், கூட்டாட்சி அரசியலமைப்பு ஒத்திவைக்கப்படும், இதனால் வாக்களிக்கும் தேவையையும் ஒதுக்கி வைக்கலாம்.
அவசரநிலைகள் தொடர்பான சட்ட உண்மைகளை, 15 கேள்வி-பதில்களுடன் அரசியலமைப்பு நிபுணர் ஷம்ரஹாயு அஜீஸ் விவாதிக்கிறார்.

அவசரக்கால அறிவிப்பு என்றால் என்ன?
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பொது ஒழுங்கு நிலையைச் சாதாரண நிர்வாக அமைப்பு மூலம் கட்டுப்படுத்த முடியாத போது, அவசரக்காலம் பிரகடனம் செய்யப்படுகிறது.
நாடு அவசரக்கால நிலையில் உள்ளது அல்லது உடனடியாக அது அமல்படுத்தப்படுகிறது என்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
ஷம்ரஹாயுவின் கூற்றுப்படி, நாடாளுமன்ற அமர்வின்போது அல்லது அது கலைக்கப்பட்டபின் அவசரக்காலச் சட்டம் அறிவிக்கப்படலாம், அதனால் சபை இடைநிறுத்தப்படாது.
இருப்பினும், நாடாளுமன்றம் கூடாமலோ அல்லது கலைக்கப்படாமலோ இருந்தால், மாமன்னரால் அவசரக்காலத்தை அறிவிக்க முடியும்.
அவசரக் காலத்தின்போது நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், சட்டத்துறை அதிகாரம் நாடாளுமன்றத்திற்குத் திரும்பும் என்று ஷம்ராஹாயு தெரிவித்தார்.
அவசரநிலை நாடு முழுவதும் அல்லது எந்தக் கூட்டாட்சி பிரதேசத்திலும் அறிவிக்கப்படலாம்.
நாடு தழுவிய நிலையில் அவசரக்காலம் அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறாது.
முஹைதீன் தற்போது, இரண்டு இருக்கைகள் பெரும்பான்மையில் மத்திய அரசாங்கத்தைத் தன்வசம் வைத்துள்ளார்.
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மை இருப்பதாகக் கடந்த மாதம் கூறினார், அவர் அம்னோ எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

























